80’களில் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்துவந்தவர் நடிகர் பிரபு.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான நடிகர் பிரபுவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் தலைவலி காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே ஹார்ட் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து அவரது தலையை ஸ்கேன் செய்து பார்த்த போது, நடுமூளையின் தமனி பகுதியில் உள்ள உள் கரோடிட் தமனியின் மேல் பகுதியில் வீக்கம் இருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் பின்னர் அவரது உடல்நிலை தேறியதை அடுத்து நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சின்னதம்பி, குரு சிஷ்யன், அக்னி நட்சத்திரம், அரங்கேற்ற வேளை, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் பிரபுவுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.