சென்னை:

சிவாஜி கட்சித்தொடங்கி என்ன ஆனார் என்று தமிழக முதல்வர், ரஜினியின் அரசியல் வெற்றிடம் குறித்த பேச்சுக்கு விளக்கம் அளித்த நிலையில்,  எம்ஜிஆர் வேண்டுகோளுக்கு இணங்கவே தனது தந்தை சிவாஜி கட்சித் தொடங்கினார் என்று  நடிகர் பிரபு விளக்கம் அளித்துள்ளார். ரசியலில் பெரிய பதவிகளுக்கான ஆசை என் தந்தைக்கு என்றுமே இருந்ததில்லை  என்றும் தெரிவித்துள்ளார்.

நேரு, காமராஜர் மீது பெரும் மதிப்புகொண்ட மறைந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன், கடந்த  1961-ம் ஆண்டு காங்கிரஸில் இணைத்து கொண்டார் சிவாஜி.  நேரு மறைந்ததும், காமராஜருக்காக ஆதரவாக இருந்து வந்த சிவாஜி, 1967ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காமராஜ் தோற்றபோதும் சரி, 1969ல் காங்கிரஸ் உடைந்தபோதும் அவருடனேயே நட்பு பாராட்டி வந்தார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கிய நிலையில், பின்னர் 1989ம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சித் தொடங்கி நடத்தி வந்தார்.  நடிப்பில் ஜொலித்து வந்த அவரால், அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை.

இந்த நிலையில், சமீபத்தில் ரஜினியின் அரசியல் பேச்சு, அதற்கு முதல்வர் எடப்பாடி அளித்த பதிலில், சிவாஜி குறிப்பிட்டு பேசியது, சிவாஜி குடும்பத்தினரிடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.  ண்மை என்னவென்று தெரியாமல் இப்போதும் என் அப்பாவின் அரசியல் பிரவேசம் விமர்சிக்கப்படுவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கமல் பாராட்டுவிழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரபு,   “எம்ஜிஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காகதான் என் அப்பா அரசியலில் இறங்கினார். சகோதரன் என்ற பூரண நம்பிக்கையில் எம்ஜிஆர் அமெரிக்காவில் அன்று வேண்டுகோள் வைத்தார். அந்த வார்த்தையை தட்டாமல் அரசியலில் இறங்கி, கட்சியை ஆரம்பித்தார் என் அப்பா என்று கூறினார்.

மேலும், அப்போது அதிமுக இரண்டாக உடைந்திருந்த நிலையில், எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அம்மா அணியுடன் தோற்போம் என தெரிந்தேதான் அன்று கூட்டணியும் வைத்ததாகவும், மற்றபடி அரசியலில் பெரிய பதவிகளுக்கான ஆசை என் அப்பாவுக்கு என்றுமே இருந்ததில்லை. ஆனால் உண்மை என்னவென்று தெரியாமல் இப்போதும் என் அப்பாவின் அரசியல் பிரவேசம் விமர்சிக்கப்படுவது வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரபு யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லாமல் பொதுவாக தற்போதைய அரசியல் வாதிகளுக்கு பதில் தெரிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.