சென்னை,

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் கருணாஸ். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்துப் பேசினார். நேற்று பெங்களூர் சென்று சசிகலாவ சந்தித்து வந்துள்ள நிலையில், இன்று முதல்வரை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசியிருப்பது அமைச்சர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதிமுக உடைந்தபிறகு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி தலைமையில் தனி அணியாகவும் செயல்பட்டு வருகிறது.

தற்போது எடப்பாடி அணியிலும் பல்வேறு உள்குத்துக்கள் நடைபெற்று வருகின்றன.  அதிலும் தோப்பு கோஷ்டி, செங்கோட்டையன் கோஷ்டி, ஜெயக்குமார் கோஷ்டி என பல கோஷ்டிகள் வலம் வருகின்றன.

இந்நிலையில் நேற்று பல்வேறு கோஷ்டிகளை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முதல்வரை தனித்தனியாக ஒன்றன்பின் ஒன்றாக சந்தித்து பேசி வந்தனர்.

இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான முக்குலத்தோர் புலிப்படையின் தலைவராக இருக்கும்  நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ.  கடந்த சனிக்கிழமை  பெங்களூர் சென்று பரப்பன அக்ரகார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து வந்தார்.

அதைத்தொடர்ந்து இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்துப் பேசினார்.

இது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.