சென்னை

பிரபல திரைப்பட நடிகர் கங்கா திடீர் என மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்துள்ளார்.

தமிழில் கடந்த 1983-ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘உயிருள்ள வரை உஷா’ படத்தில் அறிமுகம் ஆன கங்கா பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார்.  இவர் பி.மாதவனின், இயக்கி – தயாரித்த ‘கரையைத் தொடாத அலைகள்’, விசுவின் இயக்கத்தில் 1986-ஆம் ஆண்டு வெளியான ‘மீண்டும் சாவித்திரி’, போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

கங்கா தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பல படங்களில் இரண்டாவது ஹீரோ போன்ற வேடத்தை ஏற்று நடித்து, மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இவர்.சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த இவர், தன்னுடைய சகோதரர் குடும்பத்துடன் தான் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிசெய்துள்ளனர்.

சுமார் 63 வயதாகும் கங்காவின் இழப்பு திரையுலகை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கங்காவின் உறவினர்கள் இவருடைய இறுதி சடங்குகள், அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.