கொச்சி:
நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ள நடிகர் திலீப், பாவனா வன்கொடுமை குறித்த வீடியோ காட்சிகளை வழங்க வேண்டும் என்று அங்கமாலி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கேரளாவின் பிரபல நடிகையானா பாவனாவை, ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனில் போன்ற பலர் கைதுசெய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமினில் உள்ள நிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் திலீப் சார்பில் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன்மீதான குற்றப்பத்திரிகையோடு, போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வீடியோ காட்சிகளை தனக்கு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வீடியோ காட்சிகளை கொடுத்தால், நடிகையின் வீடியோ காட்சிகள் வெளியில் பரவுவதற்கும், நடிகையை மிரட்டுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தது.
இந்நிலையில், நடிகர் திலீப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மீண்டும் நடிகர் திலீப், நடிகையின் பாலியல் வன்கொடுமை காட்சிகளை தனக்கு வழங்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுமீதான விசாரணை வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.