டில்லி
பாஜக ஆதரவு தொலைக்காட்சி ஊடகவியலர் அர்னாப் கோஸ்வாமியுடன் வாக்குவாதம் செய்ததால் நகைச்சுவை நடிகர் குனால் கம்ராவுக்கு இண்டிகோ நிறுவனம் 6 மாத விமானப் பயணத்தடை விதித்துள்ளது.
இந்திய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ கட்டணக் குறைவாகச் சேவைகள் அளிப்பதால் பலரும் இந்த விமானச் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எப்போதும் இந்த நிறுவன விமானங்களில் கூட்டம் இருக்கும். அத்துடன் இந்த விமான நிறுவன விமானங்களில் பல பிரபலங்களும் பயணம் செய்வது வழக்கமாகும்.
அவ்வகையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஊடக பிரபலமான அர்னாப் கோஸ்வாமி மும்பையிலிருந்து லக்னோ செல்லும் இந்த நிறுவன விமான 6E 5517 தடத்தில் பயணம் செய்தார். அப்போது அவருடன் நகைச்சுவை நடிகரான குனால் கம்ரா பயண்ம் செய்தார். அர்னாப் கோஸ்வாமி தனது டிவி நிகழ்ச்சியில் பாஜகவுக்கு ஆதரவாகக் கருத்துக்கள் தெரிவிப்பது குறித்து கூனால் அவரிடம் பேசி உள்ளார்.
அது வாக்குவாதமாக முற்றி உள்ளது. இருவரும் பலத்த குரலில் சத்தமிட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த விமானப் பணியாளர்கள் இருவரையும் சமாதானம் செய்து அவரவர் இருக்கையில் அமர வைத்துள்ளனர். இந்நிலையில் இண்டிகோ நிறுவனம் நடிகர் குனால் கும்ராவுக்கு 6 மாதம் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்யத் தடை விதித்துள்ளது.
இண்டிகோ நிறுவனம் தனது டிவிட்டரில், “சமீபத்தில் மும்பையில் இருந்து ல்க்னோ செல்லும் 6E 5517 தட விமானத்தினுள் நடந்த நிகழ்வையொட்டி குனால் கம்ராவுக்கு அவரது விரும்பத்தகாத நடத்தைக்காக ஆறு மாதங்களுக்கு இண்டிகோ விமானத்தில் செல்ல இடைக்கால தடை விதித்துள்ளோம் எனபதை தேரிவித்துக் கொள்கிறோம்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விமானத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “விமானத்தினுள் நடைபெறும் தவறான நடவடிக்கைகள் மற்ற பயணிக்ளுக்கு தொல்லையையும் பாதுகாப்பின்மையையும் அளிக்கும் என்பதால் அது ஒப்புக் கொள்ளத்தக்கவை அல்ல. எனவே இந்த விவ்காரத்தில் தொடர்புடைய நபருக்கு இதே தடையை மற்ற நிறுவனங்களும் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என பின்னூட்டம் அளித்துள்ளார்.
இது குறித்து நடிகர் குனால் கம்ரா, “நான் அர்னாப் கோஸ்வாமியிடம் சிறிது பேச விரும்புவதாக அமைதியாகத் தெரிவித்தேன். அதன் பிறகு அவருடைய ஊடகவியல் நடத்தை ஒருதலைப் பட்சமாக உள்ளதாக குறிப்பிட்டேன் ஆனால் அர்னாப் கோஸ்வாமி கோபமடைந்து எனக்கு மன நிலை சரியில்லை என சபதமிட்டார்
அதன் பிறகு சீட் பெல்ட்களை அணிய வேண்டாம் என அறிவிப்பு வந்த பிறகு நான் மீண்டும் அவர் இருக்கை அருகே சென்று பேச முயன்றேன். ஆனால் அவர் என்னிடம் கூச்சல் போட்டார். விமான பணியாளர்கள் வந்து என்னை இருக்கைக்கு செல்லச் சொன்னார்கள் நான் விமான ஊழியர்களிடம் நடந்ததற்கு வருத்தம் தெரிவித்து விட்டுச் சென்றேன்.
ஆனால் அர்னாப் கோஸ்வாமி எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை. நடந்த சம்பவங்களுக்காக நான் ஒரே ஒருவரைத் தவிர மற்றுமுள்ள அனைத்துப் பயணிகளிடமும் மன்னிப்பு கோருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இண்டிகோ நிறுவனத்துக்குத் தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்ததுடன் பிரதமர் மோடி அநேகமாக ஏர் இந்தியாவில் இருந்து தனக்கு எப்போதும் தடை விதிப்பார் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.