கடந்த 26ம் தேதி இரவு, மது போதையில் காரோட்டி வந்த நடிகர் அருண் விஜய், சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையம் எதிரே நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனம் மீது மோதினார். இதில் காவல் வாகனத்தின் இடது பக்கவாட்டு பகுதி சேதம் அடைந்தது.
அவர் மீது பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது காரை பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி. ‘‘அருண் விஜய் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். தலைமறைவாகி விட்டார் என்று செய்திகள் வெளியாகின்றன. இதில் எதிலுமே உண்மை இல்லை. இந்த விபத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை. அப்படி இருந்தால்தான் அருண் விஜயை கைது செய்ய வேண்டி இருந்திருக்கும். ஆனால் அப்படி எதுவுமே இல்லை. சேதமடைந்த வேனை அருண் விஜய் தரப்பினரே சரிசெய்து தருவதாக கூறிவிட்டனர். மது அருந்தி வாகனம் ஓட்டியதற்கும், விபத்தை ஏற்படுத்தியதற்கும் அவர்கள் அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும்” என்றார்.
இதற்கிடையே, இன்று காலை 11.30 மணிக்கு தனது நண்பரும் வழக்கறிஞருமான சம்சுதீனுடன் துணை ஆணையர் அரவிந்த் முன்பு அருண் விஜய் சரணடைந்தார். அவரிடம் சுமான் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது..
காவல்துறையினர் பிடியில் இருந்து ஏன் ஓடினீர்கள் என்று துணை ஆணையர் அரவிந்த் கேட்டிருக்கிறார். அதற்கு அருண் விஜய், “ஏ.சி.தான் நீங்க போங்க நான் எல்லாவற்றையும் பார்த்துக்கிறேன் என்றார். அதனால்தான் நான் வீட்டுக்குக் கிளம்பி போனேன்” என்று சொல்லியிருக்கிறார்” என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.
துணை ஆணையர் விசாரணைக்குப் பிறகு அருண்விஜய்யை கைது செய்த போலீசார் அவரை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
சரி, அருண்விஜய் தப்பி ஓடினாரா, காவல்துறையில் இருந்தவர்கள் அனுப்பி வைத்தார்களா?
இதற்கான பதில்…
அருண் விஜய் வழக்கை விசாரித்த, பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏ.சி. ஜகதீசன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
டெய்ல்பீஸ்: இ்ந்த களேபாரத்துக்கு நடுவே, அருண் விஜய், தான் ஒரு நல்ல பிள்ளை என்று ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். மேலே இருக்கும் அந்த அறிக்கையை படித்துப்பாருங்கள்.