கடவுளே அஜித்தே என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்துள்ளது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

அஜித், அஜித்குமார், ஏ.கே. என்று மட்டுமே தன்னை அழைக்கவேண்டும் என்று ஏற்கனவே அவர் அறிவித்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் தற்போது அவரை ‘கடவுளே…. அஜித்தே’ என்ற கோஷத்துடன் விளித்துவருகின்றனர்.

இது தனக்கு வேதனையளிப்பதாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் குறிப்பிட்டுள்ளார், இது குறித்து அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது :

“சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில், அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க…. அஜித்தே “என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.

என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்!” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.