சென்னை : சென்னை மாநகராட்சி பகுதியில் செயல்படும் அரசு பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா்.

சென்னை மணலி மண்டலத்துக்குள்பட்ட பாடசாலை தெரு, சென்னை நடுநிலைப் பள்ளியில் 2025-26-ஆம் கல்வியாண்டுக்கு நடைபெறும் மாணவா் சோ்க்கை விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு சோ்க்கை படிவத்தினை வழங்கிய மேயா் ஆா்.பிரியா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மாநகராட்சி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டமைப்புகள், பள்ளிகளின் செயல்பாடுகள், மாணவா்களின் கல்வித்திறன் செயல்பாடு குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து அப்பள்ளிகளில் பயின்றுவரும் மாணவா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
தொடர்ந்து, மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், வார்டு- 16க்குட்பட்ட கடப்பாக்கம் ஏரியில் ரூ.58.33 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், சென்னை மாநகராட்சி, மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மணலி ஏரி, மாதவரம் ஏரி மற்றும் கடப்பாக்கம் ஏரி புனரமைப்புப் பணிகள், புதிதாக கட்டப்பட்டு வரும் சமூக நலக் கூடம் மற்றும் அங்கன்வாடி மையம், மயானபூமி மேம்பாடு, மஞ்சம்பாக்கம் நகர்ப்புர சமூக சுகாதார மைய செயல்பாடு உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும், பாடசாலை தெரு சென்னை பள்ளியில் மேற்கொள்ளப்படும் மாணவர்கள் சேர்க்கை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., துணை ஆணையாளர்கள் திரு.வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., (பணிகள்), திரு.கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்), மண்டலக்குழுத் தலைவர்கள் திரு.ஏ.வி.ஆறுமுகம் (மணலி), திரு.எஸ்.நந்தகோபால் (மாதவரம்), மாமன்ற உறுப்பினர்கள் திரு.அ.சந்திரன், திரு.அ.தீர்த்தி, திரு.க.காசிநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்