கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் தயாராகி வந்த புதிய படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வந்தன. திரைத்துறை, பல்லாயிரம் கோடி ரூபாய் தொழில்முடக்கத்தால் கடுமையான இழப்பைச் சந்தித்துள்ளது.

இதற்கிடையே சில முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இது திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே பெரிய அளவில் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை அவர்கள் எடுத்துள்ளனர். அதன்படி, ‘ஏற்கனவே ஓடிடியில் வெளியான படங்களை மீண்டும் திரையரங்குகளில் திரையிடுவதில்லை; திரையரங்குகளில் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும் என ஒப்புதல் அளித்தால் மட்டுமே திரையரங்கில் திரையிடப்படும்; ஓடிடி விற்பனைக்கான ப்ரிவியூ காட்சிகளுக்குத் திரையரங்குகள் கொடுக்கக் கூடாது’ என மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.