டில்லி,

ச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு எதிரொலியாக  நாடு முழுவதும் இரு சக்கர வாகனங்கள் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிக மாசு ஏற்படுத்தி சுற்றுச் சூழலை அச்சுறுத்தும் நகரங்களின் பட்டியலில் டில்லியும் சமீபத்தில் இணைந்துள்ளது.

ஏற்கனவே வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு, மாசுப் புகையை கட்டுப்படுத்தும் பாரத் ஸ்டேஜ் 4 எனும் தரமுறையை பின்பற்ற 2010-ல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியிருந்தது.

பிஎஸ்3 ரக எந்திரங்கள் 40 சதவீத புகையையும், பிஎஸ் நான்கு ரக எந்திரங்கள் 20 சதவித புகையையும் வெளியேற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ் 3-ல் இருப்பில் உள்ள சுமார் 8 லட்சம் வாகனங்களை பிஎஸ் 4-க்கு மாற்ற முடியாததால், அவற்றை மட்டுமாவது விற்க நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.

ஆனால், வாகன உற்பத்தியாளர்களின் வர்த்தக நோக்கத்தை விட, பொதுமக்களின் ஆரோக்கியமே முக்கியம் என கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின், பிஎஸ் 3 வாகனங்களை விற்கவும், பதிவு செய்யவும் அதிரடியாகத் தடைவிதித்து தீர்ப்பளித்தது.

ஏற்கனவே மாருதி 800, ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா, ஃபேபியா, செவர்லெட் நிறுவனத்தின் டவேரா, உள்ளிட்ட பல கார்கள் பிஎஸ் 4-க்கு மாறிவிட்டன.

பஜாஜ் ஆட்டோ, ஹோண்டா ஆக்டிவா உள்ளிட்ட சில இருசக்கர வாகனங்களும் சமீபத்தில் பிஎஸ் 4-க்கு மேம்படுத்தப்பட்டன. ஆனால், ஒரு சில நிறுவனங்கள், இருசக்கர வாகனம், நான்கு சக்கரம் மற்றும் கனரகம் உள்பட எந்த வாகனங்களுக்கும் பிஎஸ் 4 விதிகளைப் பின்பற்றாமல் இருந்ததால் தற்போது உச்சநீதிமன்றத்தின் அதிரடி தடையால் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளன.

இதனால், கையிருப்பில் உள்ள பிஎஸ் 3 வாகனங்களை சலுகை யில் விற்க முடிவு செய்துள்ளனர்.

இன்றே கடைசி நாள் என்பதால், தங்களிடம் உள்ள  இருசக்கர வாகனங்களை விற்றுத் தீர்க்க ஹீரோமோட்டார், ஹோண்டா மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதற்காக இந்த நிறுவனங்கள் வரலாறு காணாத விலைச்சலுகையையும் அறிவித்துள்ளன.ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பிஎஸ்3 மாடல் இருசக்கர வாகனங்களுக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் வரை சலுகை அறிவித்துள்ளது. ஸ்கூட்டர்களுக்கு 12 ஆயிரத்து 500 ரூபாயும், பிரீமியம் பைக்குகளுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாயும், தொடக்க நிலையில் அதிக அளவில் விற்கப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரையும் சலுகை அறிவித்துள்ளனர்.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனமானது, பிஎஸ்-3 மாடல் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் அனைத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் சலுகை அறிவித்துள்ளது. ஸ்டாக்குகள் இருக்கும் வரையோ மார்ச் 31ம் தேதி வரையோ இந்த சலுகை பொருந்தும் என இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

அடுத்ததாக 2020-க்குள் இந்தியா பிஎஸ் -6-க்கு மாறும் எனவும் அரசு கடந்த ஜனவரியில் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.