சென்னை: ஆராய்ச்சி மாணவர்களை தரக்குறைவாக நடத்தும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மாதம் (அக்டோபர்) 14ந்தேதி அன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில்  39-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த மட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரான கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியனும் பங்கேற்றார்.

விழாவில்  பட்டம் வாங்க வந்த ஆராய்ச்சி மாணவரான பிரகாஷ் என்பவர் கவர்னரிடம் இருந்து பட்டம் பெற்றதும், மேடையிலேயே  கவர்னரிடம் ஒரு புகார்  மனு அளித்தார். அந்த மனுவை கவர்னரும் பெற்றுக்கொண்டார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த மனுவில் மாணவர் என்ன கூறியிருப்பதார் என பேராசிரியர்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது.

இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ந்து முடிந்ததும், கவர்னரிடம் மனுகொடுத்த ஆராய்ச்சி மாணவர் பிரகாசை செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில்கூறிய பிரகாஷ்,    தான் விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டி கிராமம். நான் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் ஆராய்ச்சியாளர் (பிஎச்டி) பட்டம் பெற்றேன்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் 2 விடுதிகளுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் அங்குள்ள கழிவறை மழை பெய்தால் ஒழுகுகிறது. மாணவர்களுக்கு சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை.

இங்குள்ள விளையாட்டு மைதானத்தில் சில துறை மாணவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. வெளியில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு மாணவர்களை விளையாட அனுமதிக்கிறார்கள்.

ஆராய்ச்சி மாணவர்களை பேராசிரியர்கள் மட்டமாக (தரக்குறைவாக) நடத்துகிறார்கள்,  நாங்கள் வைவாவில் வெற்றி பெற வேண்டுமென்றால் அவர்கள் கூறுவதை செய்ய வேண்டும்  என நிர்ப்பந்திக்கப்படுகிறார். சில பயிற்சியாளர்கள் (பேராசிரியர்கள்)  ஆராய்ச்சி மாணவர்களை அவர்களது வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துகின்றனர். அதனால்,  ஆராய்ச்சி மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என கவர்னரிடம் மனு அளித்தேன் என தெரிவித்திருந்தார்.

பிரகாஷ் மனு குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநர் தரப்பில் உயர்கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில்,  ஆராய்ச்சி மாணவர்களை பேராசிரியர்கள் தரக்குறைவாக நடத்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  அதில்,  ஆராய்ச்சி மாணவர்களை தங்களது சொந்த பணிகளுக்கு பயன்படுத்தும் பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதிக்கப்பட்ட ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலம் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.