சென்னை: நடுநிலையோடு செயல்படுபவர் சபாநாயகர் அப்பாவு என அவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
சபாநாயகர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கடந்த 4 ஆண்டுகளாக கூறி வரும் எதிர்க்கட்சியான அதிமுக, சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின்மீது இன்று காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில் மறைந்த தலைவர்கள், உறுப்பினர் களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதையடுத்து, கேள்வி நேரம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளக்கு துரைசார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினர். இது முடிந்ததும், சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு அவையில் இருந்து வெளியேறினார். துணை சபாநாயகரான பிச்சாண்டி அவையை நடத்தினார். இதையடுத்து தீர்மானத்தின்மீது விவாதங்கள் நடைபெற்றது.
இந்த தீர்மானத்தின்மீது பேசிய முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் அப்பாவுமீது கடுமையான குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு நேர்மையாகவே செயல்படுகிறார் என பாராட்டுரை வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், அப்பாவு கனிவானவர், அதேநேரத்தில் கண்டிப்பானவர். என் தலையீடோ, அமைச்சர்கள் தலையீடோ இன்றி பேரவையை நடத்தி வருகிறார்.
நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு. விருப்பு, வெறுப்பின்றி வாதங்களை முன்வைக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். யார் மீதும் யார் வேண்டுமானாலும் விமர்சனம் வைக்கலாம். சுதந்திரக் காற்றை இந்த பேரவை சுவாசிக்கிறது. அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து சிறப்பாக செயல்படுகிறார்.
மற்றவர்கள் மனம் வருந்தாத வகையில் தன்னுடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டவர். நேர்மையான கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துக் கூறக்கூடியவர்.
பேரவை தவைவர் அப்பாவு கனிவானவர், அதே நேரத்தில் கண்டிப்பானவர். இவை இரண்டுமே பேரவைக்குத் தேவை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள். இவை இல்லாவிட்டால் பேரவை கண்ணியத்தோடு, கட்டுப்பாடோடும் இருக்காது. எனது தலையீடோ, அமைச்சர்களின் தலையீடோ இல்லாத வகையில்தான் சபாநாயகர் செயல்படுகிறார்.
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததை எண்ணி வருந்தினேன்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது பற்றோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு. அதிமுக ஆட்சியில் எத்தனை விதிமீறல்கள், நினைத்தாலே நெஞ்சு சுடுகிறது. அதிமுகவினரின் வாதங்களில் உண்மைக்கு மாறானவை உள்ளன. மேலும், அருகதை என்ன, யோக்கியதை என்ன என்றெல்லாம் அதிமுக ஆட்சியில் பேசினர்.
சபாநாயகர் தலைவரின் நடுநிலையான செயல்பாடுகளை எடுத்துரைக்க வேண்டிய கடமை முதலமைச்சருக்கு உள்ளது. அதிமுக ஆட்சியில் சபாநாயகர்கள் நடந்துகொண்டதுபோல் தற்போதைய பேரவைத் தலைவர் அப்பாவு நடந்துகொள்வதில்லை.
“மக்கள் நம்பிக்கையை இழந்தவர்களால் இந்த தீர்மானம் கொண்டு வந்திருப்பதை பார்த்து மக்களே நகைப்பார்கள் என்பது தான் உண்மை
சபாநாயகர் அப்பாவு ஜனநாயக கொள்கையில் நம்பிக்கை உடையவர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதும் பாசமும், பற்றும் உடையவர் சபாநாயகர் அப்பாவு.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கண் ஜாடையாக கூட அப்பாவுவிடம் பேசியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
“உண்மைக்கு மாறான செய்திகள் தீர்மானத்தில் உள்ளதால் பேரவை தலைவரின் நடுநிலையை பறைசாற்ற வேண்டிய பொறுப்பு முதல்வரான எனக்கு உள்ளது”
“அமளியில் ஈடுபடுபவர்களை அமைதிப்படுத்தவே சபாநாயகர் விரும்புவார், அவையில் இருந்து வெளியேற்ற விரும்ப மாட்டார்”
சுதந்திர காற்றை தமிழ்நாடு சட்டப்பேரவை சுவாசித்து கொண்டிருக்கிறது. அரசு மீது குற்றம், குறை கூற முடியாதவர்கள், இவ்வாறு தீர்மானம் கொண்டுவந்துள்ளனர் என்றார்.
மேலும், உட்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், அதை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? என எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.