டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்ட சம்பவம்  எதிரொலி  வடமாநிலங்களில் வசிக்கும் காஷ்மீரிகள் மீது தாக்குதல்  நடைபெறும் அபாயம் எழுந்துள்ளதாகவும்,  சில பகுதிகளில் மாணவர்கள்மீது தாக்குதல் நடைபெற்று உள்ளதாகவும்  ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் (JKSA)  அச்சம் தெரிவித்துள்ளது. தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

இதை காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவும் உறுதி படுத்தி உள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களைப் புகாரளிக்கின்றனர். இந்த அறிக்கைகள் உருவாகும் மாநிலங்களின் அரசாங்கங்களுடன் ஜம்மு காஷ்மீர் அரசு தொடர்பில் உள்ளது என்று முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்த படுகொலையின்போது, ஒவ்வொருவரையும் இந்துவா என கேட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் மீதான கடும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.  இதற்கிடையில், வட மாநிலங்களில் இந்து அமைப்புகள் காஷ்மீர் மாநிலத்தவரை  தங்களது பகுதியில் இருந்து வெளியேற வலியுறுத்தி வருகின்றன.  இந்து ரக்‌ஷா தளம், காஷ்மீர் முஸ்லிம்கள் வியாழக்கிழமை காலை 10 மணிக்குள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் அல்லது அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது. சில பகுதிகளில்  படித்து வரும் காஷ்மீரி மாணவர்கள் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாகவும், அதுபோல சில பகுதிகளில் வசித்து வரும் காஷ்மீரிகளை உடனே வெளியேறும்படி, அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் அச்சுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் (JKSA) , தாங்கள் பயங்கரவாதிகளின் வன்முறைக்கு எதிரானவர்கள் என்று கூறியிருப்பதுடன், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது. வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் தங்கி, படித்து வரும் காஷ்மீர் மாணவர்கள் அச்சுறுத்தல்களையும் வன்முறையையும் எதிர்கொண்டு வருவதாகவும்,  இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் உள்ள ஆர்னி பல்கலைக்கழகத்தில், விடுதிக் கதவுகளை உடைத்து, காஷ்மீர் மாணவர்களை ‘பயங்கரவாதிகள்’ என்று அழைத்து இம்சை படுத்தியதாகவும்,   பஞ்சாபின் டெராபசியில், நள்ளிரவுக்குப் பிறகு ஒரு விடுதிக்குள் தாக்குதல் நடத்தியவர்கள், மாணவர்களின் ஆடைகளைக் கிழித்து, கூர்மையான ஆயுதத்தால் ஒருவரைக் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.  சுமார் 8 இடங்களில் தாங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் (JKSA)  மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு  ஆட்சியாளர்களையும், எதிர்க்கட்சி தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும்,  காஷ்மீர் மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், அரசியல் விவாதங்களைத் தவிர்க்கவும், சமூக ஊடக நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளவும் JKSA சங்கம் அறிவுறுத்தியது. உதவி தேவைப்படுபவர்களுக்கு ஹெல்ப்லைன் எண்கள் பகிரப்பட்டுள்ளன.