கசூர், பாகிஸ்தான்
ஏழு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை ஒரே மாதத்தில் விசாரித்து குற்றவாளிக்கு பாக் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உள்ளது.
சைனப் அன்சாரி என்னும் 7 வயதுச் சிறுமி பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் கசூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி குரான் வகுப்புக்கு சென்ற போது காணாமல் போனார். காவல்துறையினர் தீவிரமாக தேடி இரு தினங்களுக்கு பின் அந்த சிறுமி பிணமாக கண்டெடுக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பின் கொலை செய்யப்ப்ட்டது தெரிய வந்தது.
பாகிஸ்தான் முழுவதும் இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என நாடெங்கும் அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தினர். தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் தனது சிறு குழந்தையான மகளுடன் வந்து இதற்கு செய்தி வாசிக்கையில் எதிர்ப்பு தெரிவித்தது மிகவும் பேசப்பட்டது.
காவல்துறையினரால் 1150க்கும் மேற்பட்ட டி என் ஏ மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இறுதியில் ஏற்கனவே பல கொலைகளை செய்துள்ளதாக கூறப்படும் இம்ரான் அலியை கைது காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை ஒரு மாதத்துக்குள் விரைந்து முடிக்கப்பட்டு தற்போது இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனையை நீதிமன்றம் வழங்கி உள்ளது.
இந்த தீர்ப்புக்கு பாகிஸ்தான் பொதுமக்களும் ஆர்வலர்களும் பெருமளவில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.