சென்னை: ‘விபத்தில்லா ரயில் பயணம்’ என்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், சென்னை உள்பட தமிழ்நாட்டின் 25 வழித்தடங் களில் ‘கவாச்’ தொழில்நுட்பம் பயன்பாடு செயல்பாட்டு வர உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

‘விபத்து இல்லாத ரயில் பயணம்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 2021-ம் ஆண்டில் மத்திய பட்ஜெட்டில் ஆத்ம நிர்பர்பாரத் திட்டத்தின் கீழ், ‘கவாச் ‘எனப்படும் பாதுகாப்பு முறை உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. கவாச் என்பது மூன்று இந்திய விற்பனையாளர்களுடன் இணைந்து ரிசர்ச் டிசைன் அண்ட் ஸ்டாண்டர்ட்ஸ் ஆர்கனைசேஷன் (ஆர்.டி.எஸ்.ஓ) மூலம் உருவாக்கப்பட்ட மோதல் எதிர்ப்பு அம்சங்களுடன் கூடிய வண்டி சிக்னலிங் ரயில் கட்டுப்பாட்டு அமைப்பாகும். இது எங்கள் தேசிய தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP) அமைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது ஓடும் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே தனது சொந்த தானியங்கி ரயில் பாதுகாப்பு சாதனம் ஒன்றை உருவாக்கி அதற்கு “கவாச்” என்று பெயரிட்டிருக்கிறது. இந்த சாதனத்தை ரயில்வே வடிவமைப்பு ஆராய்ச்சி அமைப்பான (RDSO) உருவாக்கி வருகிறது.

கவாச் எனப்படும் இந்த கவசம் தொழில் நுட்பம், ஆபத்தான நேரத்தில் சிக்னலை கடந்து செல்வதையும், அதிக வேகத்தில் செல்வதையும் தவிர்க்க லோகோ பைலட்டுக்கு உதவுகிறது. மேலும் அடர்ந்த மூடுபனி போன்ற மோசமான வானிலையின் போது ரயிலை இயக்கவும் உதவுகிறது. இரண்டு ரயில்கள் எதிரெதிர் திசையில் வரும் போது ரயில் எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள கவாச் விபத்து தடுப்பு கருவி தாமாக செயல்பட்டு 380 மீட்டருக்கு முன்பாகவே இரண்டு எஞ்சின்களையும் நிறுத்திவிடும்.

அதாவது – லோகோ பைலட் பிரேக்கைப் பயன்படுத்தத் தவறினால், தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பம் தான் இந்த கவாச். அதன்படி பல பகுதிகளில் இந்த தொழில்நுட்பம் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் இரட்டை ரயில் பாதைகள், வந்தே பாரத், சொகுசு ரயில்கள் என அடுத்தடுத்து முன்னேற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், ரயில்களின் வேகம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து தெற்கு ரயில்வே தமிழ்நாட்டின் முக்கிய 25 வழித்தடங்களில் முதன்கட்டமாக கவாச் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முன்வு வந்துள்ளது. அதன்படி, . சென்னை – அரக்கோணம் (68கி.மீ.), அரக்கோணம் – ரேணிகுண்டா (65 கி.மீ.), சென்னை – கூடூர் (138 கி.மீ.), சென்னை எழும்பூர் – தாம்பரம் – செங்கல்பட்டு (60 கி.மீ.), செங்கல்பட்டு – விழுப்புரம் (102.76 கி.மீ.) என தெற்கு ரயில்வேயின் 25 வழித்தடங்களில் ‘கவாச்’ பாதுகாப்பு தொழில்நுட்பத்தை நிறுவ தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் 25 வழித்தடங்களில் மொத்தம் 2,216 கி.மீ. தொலைவுக்கு (இருமார்க்கமாக பாதையில்) ‘கவாச்’ தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்வே முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, தெற்கு ரயில்வேயில் உள்ள 271 கி.மீ. தொலைவிலான உயர் அடர்த்தி வழித்தடங்களில் உடனடியாக ‘கவாச்’ தொழில்நுட்பத்தை நிறுவ திட்ட மிடப்பட்டுள்ளது.

இதேபோல் 1,945 கி.மீ. தொலைவிலான உயர் பயன்பாடு வழித்தடங்களிலும் ‘கவாச்’ தொழில்நுட்பத்தை நிறுவ திட்ட மிடப்பட்டுள்ளது.

சென்னை – அரக்கோணம் (68கி.மீ.), அரக்கோணம் – ரேணிகுண்டா (65 கி.மீ.),

சென்னை – கூடூர் (138 கி.மீ.) வழித்தடம் ஆகியவை உயர் அடர்த்தி வழித்தடத்தில் உடனடியாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்தாக செங்கல்பட்டு – விழுப்புரம் (102.76 கி.மீ.), ஜோலார்பேட்டை – சேலம் – ஈரோடு (179.29 கி.மீ.), அரக்கோணம் – ஜோலார்பேட்டை (150 கி.மீ),

சென்னை சென்ட்ரல் – கடற்கரை (6.62 கி.மீ.),

சென்னை எழும்பூர் – தாம்பரம் – செங்கல்பட்டு (60 கி.மீ.),

 ஈரோடு – இருகூர் – கோவை – போத்தனூர் (106.54), இருகூர் – போத்தனூர் (10.77 கி.மீ.).

ஈரோடு – கரூர் (65.38 கி.மீ.), சேலம் – நாமக்கல் – கரூர் (85.19 கி.மீ.),

விழுப்புரம் – திருச்சி (178 கி.மீ.), திருநெல்வேலி – நாகர்கோவில் (73.29 கி.மீ.),

திண்டுக்கல் – மதுரை ( 65.78 கி.மீ.), மதுரை – விருதுநகர் (43.18 கி.மீ.),

விருதுநகர் – வாஞ்சிமணியாச்சி (84.48 கி.மீ.),உட்பட 22 உயர் பயன்பாடு வழித்தடங்களில் ‘கவாச்’ தொழில்நுட்பத்தை நிறுவ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக  தமிழ்நாட்டில் மட்டும் 25 வழித்தடங்களில் கவாச் தொழில்நுட்பம் நிறுவபப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் ரயில் விபத்துகளை தடுக்க ‘கவாச்’ தொழில்நுட்பம்! தெற்கு ரயில்வே தகவல்…