சென்னை புறநகர் ரயில் வழித்தடத்தில் 2025 ஜனவரி முதல் ஏ.சி. புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

சென்னை பீச் – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் இந்த ஏ.சி. ரயில் இயக்கப்பட உள்ளது.

இதற்காக 12 ஏ.சி. பெட்டிகளைக் கொண்ட ரயில் ஐ.சி.எப். ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாராகி வருகிறது.

டிசம்பர் மாதம் இந்த ரயில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தயாரிப்பதில் காலதாமானதால் வரும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் முதல் ரயில் ஜனவரி மாதம் வரும் நிலையில் அடுத்த ரயில் மார்ச் மாதம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை பீச் – வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் வழித்தடத்தில் 9 பெட்டிகளை கொண்ட ரயிலை இயக்கும் வகையிலேயே பல ரயில்நிலையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த வழித்தடத்தில் இந்த ரயிலை இயக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் ஏ.சி. புறநகர் ரயில்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை புறநகர் ரயிலும் விரைவில் ஏ.சி.மயமாக உள்ளது.

இதற்கான ரயில் டிக்கெட் கட்டணம் விரைவில் நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது புறநகர் ரயில்களில் உள்ள முதல்வகுப்பு பெட்டிகளில் சாதாரண கட்டணத்தை விட ஐந்து மடங்கு டிக்கெட் கட்டணம் உள்ள நிலையில் இந்த ஏ.சி. புறநகர் ரயில் கட்டணம் எவ்வளவு என்பது விரைவில் தெரியவரும்.