கே.எஸ் ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS) அவர்களின் முகநூல் பதிவு:
நெல்லை மாவட்டத்தில் பிறந்தாலும் தஞ்சை தொம்பன் குடிசை பகுதியில் நீண்ட காலம் வாழ்ந்த இசை மேதை ஆபிரகாம் பண்டிதரை மறக்க இயலாது.
ஆபிரகாம் பண்டிதர் இளம் வயதிலேயே இசையில் மிகுந்த ஆர்வம் உடையவராக விளங்கினார். திண்டுக்கல்லில் உள்ள இசை வல்லுநரான ‘வித்வான்’ சடையாண்டிப் பத்தரிடம் இசைக் கலையை முறையாகக் கற்றார். தாமே இசைப் பாடல்களை இயற்றினார். தம்மிடம் பயின்ற மாணவர்களுக்கும் இசைப் பயிற்சி அளித்தப் பாட வைத்தார்.
தமிழகமெங்கும் ஆங்காங்கே சிதறிக் கிடந்த இசை பற்றிய ஓலைச் சுவடிகளைத் திரட்டினார். தமிழகத்தில் முதலாவதாக ‘கீதம்’, ‘வர்ணம்’ முதலியவற்றைத் தமிழில் கற்பிக்க, அவற்றில் பாடல் இயற்றித் தமிழிசை இயக்கத்திற்குத் தானம் செய்தார்! கீர்த்தனைகளுக்கு இசையமைக்கும் நெறிமுறைகளை ஆராய்ந்து வெளியிட்டார். இசை மேதைகளின் வரலாற்றுச் சுருக்க அகராதி அமைத்தார்.
.
‘தென்னக இசைக்கு மூலமாக உள்ளது தமிழிசையே’ – என்பதைத் தமிழிலக்கியங்கள் மூலம் நிலை நாட்டினார். தமது சித்த மருத்துவப் பணி மூலம் கிடைத்த வருமானத்தை இசை ஆய்வுப் பணிகளுக்கெனச் செலவழித்தார்.
‘சங்கீத வித்யாஜன சங்கம்’ என்னும் அமைப்பை ஏற்படுத்தித் தமிழகம் முழுவதிலிருந்தும் இசைக் கலைஞர்களை வரவழைத்து, ‘சுருதிகள்’, ‘இராகங்கள்’ பற்றிய பல கருத்தரங்குகளைத் தஞ்சையில் நடத்தினார். மேலும், 1912-ஆம் ஆண்டு முதல் 1916-ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் ஏழு இசை மாநாடுகளைத் தமது சொந்த நிதியில் நடத்திக் காட்டினார். இந்த மாநாடுகளின் மூலம் இசைக் கலையை வளர்க்க அரும்பாடுபட்டார்.
‘கருணாமிர்த சாகரம்’ என்னும் ஒப்பற்ற இசைத் தமிழ் ஆய்வு நூலை 1917-ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலில் தமிழின் பழைமையையும், தமிழிசையின் சிறப்பினையும், இசைக் கலையில் தமிழர் பெற்றிருந்த மதி நுட்பத்தையும் விளக்கியிருந்தார். மூன்று தமிழ்ச் சங்கங்கள் பற்றிய சில முக்கியக் குறிப்புகள், அயலவரின் நுழைவால் அழிந்துவிட்ட நூல்கள், இசை வல்லுநர் பற்றிய விபரங்கள், இசை இலக்கணங்கள் மற்றும் நுட்பங்கள் இசை ஆய்வுப் பணிகள் பற்றியெல்லாம் விவரித்திருந்தார்!
இசை சம்பந்தமான இந்திய நூல்கள் பற்றிய ஒப்பாய்வும் அந்நூலில் இடம் பெற்றிருந்தது. பழந்தமிழ் நாட்டில் வழங்கி வந்த பாலை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என்னும் நால்வகை யாழ்களைப் பற்றிய விபரங்களைப் பட்டியலிட்டிருந்தார்’ மேலும், தமிழ்ப் பண்கள், அவற்றிற்குத் தற்காலத்தில் சூட்டப்பட்டுள்ள இராகங்களின் பெயர்கள், விளக்கங்களுடன் இடம் பெற்றுள்ளன. தமிழில் கருணாமிர்த சாகரம் போன்றதோர் இசைத் தமிழ்ப் பெருநூல் இதுவரை வெளிவரவில்லை! இந்நூல் ‘ஒப்பற்ற இசைக் களஞ்சியம்’ எனப் போற்றப்படுகிறது.
தியாகய்யர், தீட்சதர், சியாமா சாஸ்திரிகள் முதலானோர் செய்த கீர்த்தனங்களும், வர்ணங்களும் தெலுங்கு மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் இசையரங்குகளில் பாடப் பெற்று வந்தன; அதனை எண்ணிப் பார்த்து இதயம் நொந்தார்! பொருட்சுவையோடு கூடிய இனிய தமிழ்ப் பாடல்கள் இசையோடு இணைந்தால்தான் நடைபெறும் இசை விழாக்கள் நற்பயன் அளிக்கும் என்பதை உணர்ந்தார். தமிழில் பல பாடல்களை எழுதினார். அவற்றிற்குத் தாமே இசையமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
தொண்ணூற்று ஆறு வகைத் தமிழ் இசைப் பாடல்களை இயற்றியும் இசையமைத்தும் வெற்றி கண்டார். ஆனால், அவரது கனவு இன்றுவரை நிறைவேறாத வகையில், தற்போதும் தமிழகத்து இசை அரங்குகளில் தெலுங்கு இசைப் பாடல்களே முழங்குகின்றன. முதன்மையாக பாடப்படுகின்றன. இவ்வேதனைகளுக்கு என்றுதான் விடுவு பிறக்குமோ?
இசைத் தமிழின் மேன்மை தமிழகமெங்கும் பரவி, இசையரங்குகளில் தமிழ் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே தமது வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டார் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர். வறுமையில் வாடிய இசைக்கலைஞர்களுக்குப் பொருளுதவியும் அளித்தார். தமிழிசை குறித்த நூல்களை வெளியிட அச்சகம் நிறுவினார்.
.
‘சிலப்பதிகாரம் முதலிய இலக்கிய நூல்களைச் செவ்வனே ஆராய்ந்தும் தமிழ் மொழியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழிசை அமைந்து இருந்தது என்பதையும், சங்கீத முறைகளையும் அவற்றின் பேதங்களையும், நுட்பங்களையும் யாவரும் எளிதில் அறிந்து கொள்ளும்படி விளக்கிப் பண்டிதரவர்கள், ‘கருணாமிர்த சாகரம்’ என்னும் நூலை அளித்தமைக்காகத் தமிழுலகம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது’- என தமிழ்த் தாத்தா உ.வே.சா. பாராட்டியுள்ளார்.
‘கருணாமிர்த சாகரம்’ நூலின் இரண்டாவது யாகம் அவருடைய மறைவிற்குப் பின்பு 1946-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மேலும், ‘நன்மறை காட்டும் நன்னெறி’ என்ற நூலையும் எழுதித் தமிழுலகுக்கு அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியின் அருகிலுள்ள ‘சாம்பவர் வடகரை’ என்னும் கிராமத்தில், முத்துசாமி-அன்னம்மாள் வாழ்விணையருக்கு மகனாக 02.08.1859-ஆம் நாள் பிறந்தார். சுரண்டையில் ஆரம்பக் கல்வியை முடித்தார். பின்னர் பன்றிகுளம் என்னும் ஊரில் உயர்தர ஆரம்பப் பள்ளிக் கல்வி பயின்றார்.
திண்டுக்கல் ‘நார்மல்’ ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சி பெற்றார். தமது கிராமத்துக்கு அருகில் உள்ள சுரண்டை என்னும் ஊரில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகச் சேர்ந்து பணி புரிந்தார்.
அருள்திரு. ‘யார்க்’ என்பவர், இவரது அறிவாற்றலையறிந்து, தமது மாதிரிப் பள்ளியில் ஆசிரியராக நியமனம் செய்தார். யார்க்கிடம் புகைப்படம் எடுக்கும் கலையையும் நன்றாகக் கற்றுக் கொண்டார். அத்தோடு, சித்த மருத்துவம் குறித்த சுவடிகளையும், நூல்களையும் முற்றாகப் படித்து ஆய்ந்து, சிறந்த சித்த மருத்துவர் ஆனார்.
தேனிக்கு அருகில் உள்ள ‘சுருளி மலை’க் காட்டில் சந்தன மரத்தடியில் வாழ்ந்து வந்த ‘கருணானந்த மகரிஷி’யைச் சந்தித்தார். அவரிடம் மருந்து செய்முறைகளைக் கற்றார்.
தமது மருத்துவப் பணியை 1877 ஆம் ஆண்டு தொடங்கினார். தாம் தயாரித்த மருந்துகளுக்கு ‘கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்’ எனப் பெயரிட்டார்.
ஞானவடிவு பொன்னம்மாள் என்னும் ஆசிரியப் பெண்மணியை 1882 ஆம் ஆண்டு மணம்புரிந்தார்.
திருமணத்திற்குப் பின்னர், தஞ்சை சென்று, டபிள்யூ.எச். பிளேக் என்பவர் மூலம் ‘சீமாட்டி நேப்பியர் பெண்கள் பாடசாலை’யில் ஞானவடிவு பொன்னம்மாள் தலைமை ஆசிரியராகவும், ஆபிரகாம் தமிழ் ஆசிரியராகவும் பணியேற்றனர். ஆறு ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு பின்பு விலகி, மருத்துவத் துறையில் முழுமையாக ஈடுபட்டனர்.
.
இந்தியாவின் பல இடங்களில் 1898 ஆம் ஆண்டு ‘பிளேக்’ நோய் தாக்கிப் பலர் இறந்தனர். ஆபிரகாம் தமது ‘செந்தூரச் சஞ்சீவி’ மாத்திரைகளையும், பிற மருந்துகளையும் தயார் செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கினார். இதன்மூலம் மக்கள் நலமடைந்தனர். ஆபிரகாமுக்கு மக்களிடையே நற்பெயரும், புகழும் பரவியது.
தஞ்சைக்கு மிக அருகில் நூறு ஏக்கர் நிலத்தை வாங்கி, அதில் விவசாயப் பண்ணையை நிறுவினார். தம் குருநாதரின் நினைவாக ‘கருணானந்தபுரம்’ என அப்பண்ணைக்குப் பெயரிட்டு மகிழ்ந்தார்! அப்பண்ணையில் மருந்துகள் தயாரிப்பதற்குப் பயன்படும் வகையில் ஏராளமான மூலிகைகளைப் பயிரிட்டார்.
விவசாயத்துறையில் ஆராய்ச்சிகள் பல செய்து புதுப்புதுக் கரும்பு வகைகளையும், கலப்பினச் சோளப் பயிர்களையும் கண்டுபிடித்தார். பட்டுப்பூச்சிகளை வளர்த்து பட்டு நூல் உற்பத்தியிலும் ஈடுபட்டார். ஆட்டுப்பண்ணையும், மாட்டுப்பண்ணையும் வைத்திருந்தார். விவசாயப் பண்ணையில் நிகழ்த்திய ஆராய்ச்சிகளுக்காகப் பல பதக்கங்களும், பாராட்டுப் பத்திரங்களும் பெற்றார்! .
வேளாண்மையிலும், சித்த மருத்துவத்திலும் ஆபிரகாம் பண்டிதர் ஆற்றிய தொண்டைப் பாராட்டி அன்றைய சென்னை ஆளுநர் சர். ஆர்தர்லால் 1909 ஆம் ஆண்டு ‘இராவ் சாகிப்’ என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.
தஞ்சை மக்கள் ஆபிரகாமின் மருத்துவத் தொண்டைப் பாராட்டி ‘பண்டிதர்’ எனும் சிறப்புடன் அழைத்தனர்.
தமிழிசைக்காகவும், சித்த மருத்துவத்துக்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் தொண்டு புரிந்த தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் 1919 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் நாள் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்.
தமிழிசையும் சித்த மருத்துவமும் ஆபிரகாம்பண்டிதரைத் தம் நெஞ்சில் நிறுத்தும் !