விருதுநகர்
கோவில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 80க்கும் அதிகமானோர் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (ஜூன்.09) விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே எஸ்.கல்விமடை கிராமத்தில் கருப்பணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் சில நாட்களாக தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த அன்னதானத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்த ஏராளமான பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை மற்றும் திருப்புவனம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது மூன்று நாட்களாக தொடர்ந்து அன்னதானம் சாப்பிட்ட நபர்களுக்கு மட்டும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளாக தெரிகிறது.
இந்த விழாவில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் ஏற்றுக்கொள்ளாமல் வாந்தி மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கோயிலில் அன்னதானம் சாப்பிட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சுமார் 80 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 205 -வது வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.