புதுடெல்லி: இந்தியாவில், கொரோனா தடுப்பு மருந்தை, முதற்கட்டமாக சுமார் 30 கோடி பேர் பெறுவர் என்று தெரிவித்துள்ளார் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய்ராகவன்.

இந்த 30 கோடியில், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டோர், ஏற்கனவே, பல்வேறு நோய்களுக்கு உட்பட்ட இளம் வயதினர் ஆகியோர் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் அமைச்சகம் மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய விஜய்ராகவன் இதைத் தெரிவித்தார்.

“அடுத்தாண்டு மார்ச் முதல் மே மாதம் வரையான காலத்தில், பெருவாரியான மக்களுக்கு இந்தத் தடுப்பு மருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, தேசிய நோய் தடுப்பு திட்டத்தைப் பயன்படுத்தி, அடுத்த ஆண்டுகளில் இது பரவலாக்கப்படும்.

சுமார் 1 கோடி சுகாதாரப் பணியாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசின் காவல் படைகள், ராணுவத்தினர் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு படைகளில் பணியாற்றும் சுமார் 2 கோடி பேர், 50 வயதுக்கு மேற்பட்ட முன்னுரிமை வகையினர், மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று மொத்தமாக 30 கோடி நபர்கள், முதற்கட்ட தடுப்பு மருந்து விநியோகத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என்று அவர் விரிவாக தெரிவித்துள்ளார்.