பாகிஸ்தானில் இருந்து மீண்டு வந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு பஞ்சாப் மாநிலத்தின் பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது வழங்கப்படும் என அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதி அறிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, கடந்த 27ம் தேதி பாகிஸ்தான் போர் விமானத்தின் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானி அபிநந்தன் அந்நாட்டு ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டார். அபிநந்தன் எதிரி நாட்டு ராணுவத்திடம் சிறைப்பிடிக்கப்பட்டாலும், தனது மன உறுதியை விடாமல் அவர்களுக்கு உரிய பதிலளித்து வந்தார்.
சிறைப்பிடிக்கப்பட்ட விமானியை மீட்க இந்தியா துரித நடவடிக்கைகளை எடுத்த நிலையில் 75 மணி நேரத்திற்கு பிறகு அவரை இந்திய எல்லையில் ராணுவ அதிகாரிகளிடம் பாகிஸ்தான் அரசு வெளியிட்டது. இதனை தொடர்ந்து தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு தலைவர்கள், பிரபலங்கல், விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்கள் என பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவிற்காக சண்டையிட்டு எதிரிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு மீண்டு வந்த வீரர் அபிநந்தனை சிறப்பிக்கும் பொருட்டு பஞ்சாப் மாநிலத்தின் பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதி என்ற தொண்டு நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் கிளைகளை வைத்து சமூகச்சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ’பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ வழங்க அதன் நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். அதன்படி, இந்த ஆண்டிற்கான ‘பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ விமானி அபிநந்தனுக்கு வழங்கப்படும் என அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதியின் மகாராஷ்டிரா மாநில ஒருங்கிணைப்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 17ம் தேதி மகாவீர் ஜெயந்தி அன்று இந்த விருது அபிநந்தனுக்கு வழங்கப்பட உள்ளது. விருதுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் ரொக்கப்பணமும் அபிநந்தனுக்கு அளிக்கப்பட உள்ளது.