டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக கருத்து சொல்லுமாறு ஊடகங்கள் உங்களை தூண்டி வருவதாக பிரதமர் மோடி தம்மிடம் நகைச்சுவையாக கூறினார் என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜி கூறியிருக்கிறார்.

பொருளாதாரத்துறையில் நோபல் பரிசு பெற்றவர் அபிஜித் பானர்ஜி. அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் சூழ்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் சந்திப்பு எவ்வாறு இருந்தது என்பது குறித்தும், பிரதமர் மோடி தம்மிடம் என்ன பேசினார் என்பது குறித்தும் விளக்கினார். அவர் கூறியதாவது: எங்களின் சந்திப்பு மிகவும் ஒரு ஆக்கப்பூர்வமான, ஒரு சிறந்த சந்திப்பாக இருந்தது.

அவர் (மோடி) நகைச்சுவையுடன் தான் என்னுடம் பேச்சை ஆரம்பித்தார். அதாவது, ஊடகங்கள் தமக்கு எதிராக உங்களை எவ்வாறு திருப்பி விடுகிறது என்று பேசினார். அதாவது, மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பி, உங்களை எனது எதிரியாக்க முயன்று வருகின்றனர் என்று பிரதமர் மோடி  தெரிவித்தார்.

பத்திரிகை, தொலைக்காட்சி என அனைத்து தரப்பிலும் செய்திகளை தெரிந்து வைத்திருக்கிறார். நீங்கள் (ஊடகங்கள்) என்ன செய்ய முயற்சிக்கின்றன என்பதையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார் என்றார்.

தொடர்ந்து அபிஜித் பானர்ஜி கூறியதாவது: தற்போதுள்ள நிலையில் வங்கிகளின் நிலைமை கடும் நெருக்கடியாக இருக்கிறது. அதனை போக்க அவசியம் நடவடிக்கை தேவை என்றார். அப்போது, செய்தியாளர்கள் சிலர், மனிதவள குறியீட்டில் இந்தியாவின் இடம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது என்று பேட்டியை அபிஜித் பானர்ஜி நிறைவு செய்தார்.

நடப்பு ஆண்டில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்திய, அமெரிக்க பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, பிரான்ஸ் வம்சாவளி அமெரிக்கரும், அபிஜித் பானர்ஜி மனைவியுமான எஸ்தர் டப்லோ, அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டது.

அண்மையில் தான் அவர், இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. அது உண்மைதான், தடுக்க வேண்டும் எனில் உடனடி நடவடிக்கைகள் அவசியம் என்று கூறியிருந்தார்.