சென்னை: 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தால் 6 கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட சுமார் 4.5 கோடி குடும்பங்கள் பயனடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமானத்தைப் பொருட்படுத்தாமல் ரூ.5 லட்சம் வரை சுகாதாரப் பாதுகாப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முடிவு ஏறக்குறைய ஆறு கோடி மூத்த குடிமக்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவர்கள் இப்போது குடும்ப அடிப்படையில் ஆண்டுக்கு ₹5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீட்டுத் தொகைக்கு தகுதி பெறுவார்கள். முன்னதாக, இத்திட்டம் ஏழை மற்றும் நலிந்த குடும்பங்களுக்கு மட்டுமே கிடைத்தது. இந்த விரிவாக்கத்திற்கு நிதியளிப்பதற்காக ₹3,437 கோடி ஆரம்ப செலவீனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியளார்களிடத்ம பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ’70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உலகளாவிய சுகாதார பாதுகாப்பு, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனாவின் கீழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய முடிவு. இந்த முடிவில் ஒரு சிறந்த மனிதாபிமான சிந்தனை உள்ளது’ என தெரிவித்தார்.
மத்திய அரசின் நடவடிக்கையின் மூலம் 6 கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட சுமார் 4.5 கோடி குடும்பங்களுக்கு குடும்ப அடிப்படையில் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தகுதியுள்ள மூத்த குடிமக்களுக்கு AB PM-ன் கீழ் புதிய தனித்துவமான அட்டை வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே AB PM-JAY இன் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை கூடுதல் டாப்-அப் காப்பீட்டைப் பெறுவார்கள், மற்ற அனைத்து மூத்த குடிமக்களும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை காப்பீட்டைப் பெறுவார்கள்.
முதியோர்களுக்கு அறிவுறுத்தல்:
இதற்கிடையில், மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS), முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS), ஆயுஷ்மான் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) போன்ற பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்களை ஏற்கனவே பெற்றுள்ள மூத்த குடிமக்கள் அதிலேயே தொடரலாம். அல்லது AB PMJAY-ஐத் திட்டத்தையும் தேர்வுசெய்யலாம் என அரசு வலியுறுத்தியுள்ளது.
முதியோருக்கான அரசு மருத்துவ காப்பீடு திட்ட விவரம்:
AB PM-JAY திட்டம் என்பது, 12.34 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 55 கோடி நபர்களுக்கு, ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கும் உலகின் மிகப்பெரிய பொது நிதியுதவி வழங்கும் காப்பீடு திட்டமாகும். தகுதியுள்ள குடும்பங்களின் உறுப்பினர்கள் என சுமார் 7.37 கோடி பேர் இந்த திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். பயனடந்தவர்களில் 49 சதபிகிதம் பேர் பெண்கள் ஆவர். சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பயனாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது..
முன்னதாக, மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள 40 சதவிகித மக்களை உள்ளடக்கிய 10 கோடிக்கும் அதிகமான ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் AB PM-JAY திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டன. ஜனவரி 2022 இல், திட்டத்தின் கீழ் பயனாளர்களின் எண்ணிக்கையை 10.74 கோடியில் இருந்து 12 கோடி குடும்பங்களாக உயர்த்தியது. இதற்காக நாடு முழுவதும் பணிபுரியும் 37 லட்சம் ASHAS/AWWS/AWHS மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இலவச சுகாதாரப் பலன்கள் கிடைக்கும் வகையில் இந்தத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.