சென்னை: தமிழ்நாட்டில், அரசு நிறுவனமான ‘ஆவின்’ பன்னீர், பாதாம் பவுடர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே அத்யாவசிய பொருட்கள், காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அரசு நிறுவனமான ஆவினும் பால் பொருட்களை கிலோவுக்கு ரூ.100 உயர்தப்பட்டு இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக அரசு பதவி ஏற்றது முதல், வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணங்களை உயர்த்தி நிலையில், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விலைகளையும் உயர்த்தியது. பொதுமக்களுக்காக தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் மூன்று முறை பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தியது. அப்போதும், ( 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி) ஆவின் பாதம் பவுடர் மற்றும் பன்னீர் விற்பனை விலை ஒரு கிலோவுக்கு 100.00ரூபாய் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மேலும் கிலோவுக்கு ரூ.100 வரை உயர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு இன்று (25.07.2023) முதல் அமுலுக்கு வந்துள்ளது. இது பொதுமக்களிமைடயே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவின் பன்னீர், பாதாம் பொருட்கள் மீதான விலை ரூ.20 முதல் ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பன்னீர் ஒரு கிலோ விலை ரூ.450இல் இருந்து ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பன்னீர் அரை கிலோ விலை ரூ.250இல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பன்னீர் 200 கிராம் விலை ரூ.100இல் இருந்து ரூ.120ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பாதாம் மிக்ஸ் 200 கிராம் விலை ரூ.ரூ.100இல் இருந்து ரூ.120ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. மக்கள் நலன் கருதி தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஆவின் பாதாம் பவுடர் மற்றும் பன்னீர் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் எனவும், பால் கொள்முதல் உயர்வுக்கேற்ற வகையில் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.