சேலம்: தீபாவளியை முன்னிட்டு, ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகளான இனிப்பு காரம் வகைகள் மற்றும் பால் பொருட்களின் சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஆவின் தயாரிப்புகளான இனிப்பு, காரம் வகைகள் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தின் பொருட்கள் தீபாவளி சிறப்பு விற்பனையை சேலத்தில் அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய , சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது அரசு சார்ந்த கூட்டுறவு நிறுவனமாகும். இந்நிறுவனம் கிராமங்களில் உள்ள விவசாய பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தினை முன்னேற்றும் நோக்கிலும், கிராம மற்றும் நகர்புறங்களில் வாழும் பொது மக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களை இலாப நோக்கம் அல்லாது சேவை நோக்கோடு நியாயமான விலையில் வழங்கிடும் அத்தியாவசிய பொது சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தமிழ்நாட்டிலேயே பால் மற்றும் பால் உபப்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
சேலம் ஒன்றியத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 6.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு அதில் 2.25 லட்சம் லிட்டர் பால் உள்ளூர் விற்பனைக்கும், சென்னை தேவைக்கு 2.70 லட்சம் லிட்டரும் அனுப்பப்படுகிறது. மீதம் உள்ள பாலில் பால் உபபொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூர்பா, பால்பவுடர், டெட்ரா மில்க், ஜஸ்கீரிம் என அனைத்தும் தயாரிக்கப்பட்டு சில்லரை விற்பனையாளர்கள், ஒன்றிய பாலகங்கள், மொத்த விற்பனையாளர்கள், தனியார் பாலகங்கள் மூலம் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
மேலும், சேலம் ஆவின் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய பசும்பாலிலிருந்து எடுக்கப்பட்ட வெண்ணெய், ஆவின் நெய் மற்றும் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுவை மிகுந்த இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் விற்பனை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், தீபாவளி 2025 பண்டிகையை முன்னிட்டு சேலம் ஒன்றியத்தில் 42 மெட்ரிக் டன் ஆவின் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் பொருட்டு பொதுமக்கள் எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு தூய பசும்பால் மற்றும் நெய்யினால் தயாரிக்கப்படும் ஆவின் இனிப்பு மற்றும் காரவகைகளை வாங்கி பயன்பெறவும் என அவர் கேட்டுக்கொண்டார்.
ஆவின் பொருட்கள் விலை பட்டியல்
தீபாவளி பண்டிகைக்கென ஆவினில் பால் பொருட்கள் விற்பைன செய்யப்படுகிறது.
பால்கோவா (250 கிராம்) ரூ.130 விலையிலும்,
ஸ்பெஷல் மைசூர்பா (250 கிராம்) ரூ.140 விலையிலும்,
கேரட் மைசூர்பா (250 கிராம்) ரூ.140 விலையிலும்,
மில்க் சேக் (250 கிராம்) ரூ.140 விலையிலும்,
முந்திரி கேக் (250 கிராம்) ரூ.185 விலையிலும்,
ஆவின் மிக்சர் (250 கிராம்) ரூ.85 விலையிலும்,
பாதாம் மிக்ஸ் பவுடர் (250 கிராம்) ரூ.120 விலையிலும்
விற்பனை செய்யப்படுகிறது.