புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் பல்வேறு காரணங்களைக் கூறி தமிழ்நாட்டை விட்டு வெளியேறியதால் சென்னையில் ஆவின் பால் விநியோகம் நேற்று இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டதாக முகவர்கள் குற்றம்சாட்டினர்.
தமிழ்நாட்டில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரவியதை அடுத்து வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள், குற்றப்பின்னணி உள்ளவர்கள் பலரும் மாநிலத்தை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு அல்லது அண்டை மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தவிர, ஹோலி பண்டிகை மற்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் ஆகியவற்றின் காரணமாகவும் இளைஞர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றுள்ளதை அடுத்து தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழில் துறையினர் மற்றும் இவர்களை பணியில் ஈடுபடுத்தும் ஏஜெண்டுகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களின் சாலையோர பானிபூரி கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதுடன் ஆவின் பால் விநியோகமும் மந்தகதியில் உள்ளது.
உற்பத்தி மற்றும் நுகர்வோர் கூட்டுறவு அமைப்புகளான ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் தினக் கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் வெளிமாநில இளைஞர்கள் பலர் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தென் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் நேற்று 2வது நாளாக பாதிக்கப்பட்டது. பல இடங்களில் அதிகாலை பால் தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், தனியார் பால் விநியோகம் அமோகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
பால் முகவர்களின் குற்றச்சாட்டை அடுத்து செய்தியாளரிடம் பேசிய ஆவின் நிறுவன அதிகாரி ஒருவர், “எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஹோலி பண்டிகையைக் கொண்டாட வெளிமாநில தொழிலாளர்கள் குறிப்பாக வடமாநில புலம் பெயர் தொழிலாளர்கள் சென்றுள்ளதால் டேங்கர் லாரியில் ஏற்றுவது தாமதமாகிறது இதனால் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் நாளொன்றுக்கு சுமார் 5.50 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
பால் அட்டைதாரர்களுக்கு வழக்கம்போல அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணிக்குள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும். அதேநேரத்தில், முகவர்களுக்கு அதிகாலை 3 மணிக்கு வழங்க வேண்டிய பால் கடந்த இரண்டு நாட்களாக காலை 8 மணிக்கு வழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக முகவர்கள் மூலம் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மளிகைக் கடைகளுக்கு வழங்கும் ஆவின் பால் தாமதம் ஏற்பட்டது என்றும் பால் விநியோகம் ஓரிரு தினங்களில் சீராகும் என்றும் தெரிவித்துள்ளார்.