விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற, பிக் பாஸ் நான்காம் சீசன் நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனன் முதல் இடத்தை பெற்றார்.

ஆரிக்கு பரிசுத் தொகையாக ரூ 50 லட்சம் கிடைத்தது. இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதில் அவர் முதன் முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் அபின் இந்தப் படத்தை இயக்குகிறார். ஷவுரியா புரொடக்ஷன்ஸ் சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கிறது.

ஆரி ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்கிறார். இன்வெஸ்ட்டிகேசன் கிரைம் த்ரில்லர் படமான இதில் முனிஷ் காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர்.

முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி மதுரை, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற உள்ளது. ஏஆர் ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்டெர்லின் நித்தியா இசையமைப்பாளர் ஆகிறார். பிவி கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் பாடல் எழுதுகிறார்.