சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேர் ஆடி அசைந்து சென்றதுமு.
பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது.
ஆனி திருமஞ்சனம் ஸ்ரீநடராஜருக்கு உரிய அற்புதமான நாள். ஆகவே சிவனாரின் அனைத்துத் தலங்களிலும் ஆனி திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. திருமஞ்சனம் என்றால் மங்கள ஸ்னானம். அதாவது மங்கள நீராட்டு. சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருமஞ்சனம் என்றே அழைக்கப்படுகிறது.
ஆனி திருமஞ்சனத்தையொட்டி, இன்று சிதம்பரத்தில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. 100 டன் எடை, 74 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேரில் நடராஜர் எழுந்திரு அருள் பாலித்து வருகிறார். இந்த தேரானது நான்கு மாட வீதிகளில் வீதி உலா வருகிறது. இதை பல ஆயிரம் பேர் கண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் உள்ள மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித் தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர்.
தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக கீழவீதி தேர்நிலையை அடைந்தன. உழவாரப்பணி மற்றும் திருமுறை இன்னிசை: தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர். தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர். சிவனடியார்கள் சிவவாத்தியங்களை முழங்கி நடனமாடி சென்றனர்.
சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சன விழா, பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டாண்டு காலமாக, ஆனியில் நடைபெறும், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நிகழும் ஆனி திருமஞ்சனம் நிகழ்வைக் காண இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
முக்கிய விழாவான தேரோட்டம் இன்று (11ஆம் தேதி) திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதை காண பக்தர்கள் குவிந்துள்ளதால் நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
முன்னதாக ஜுலை 3ந்தேதி சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து திருதேரோட்டம் ஜூலை 11ஆம் தேதியும், ஆனி திருமஞ்சன தரிசன விழா 12ஆம் தேதியும் நடைபெறுகிறது.
நடராஜருக்கு நடைபெறும் ஆனி திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும் தம்பதிகளுக்கு சுகமான வாழ்வும் கிடைப்பதாகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்றும் ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், வளமும் கூடும் என்றும் கருதப்படுகிறது.
ஆனி திருமஞ்சனம் முடிந்து நாளைய தினம் ஸ்ரீநடராஜரையும், அன்னை ஸ்ரீசிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அங்கே அவருக்கு திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகங்கள் நடைபெறும். பிறகு இருவரும் ஆனந்த நடனம் புரியும் அற்புத காட்சியைத் தரிசிப்பார்கள் பக்தர்கள். ஆனந்த நடனம் ஆடியபடியே, சித்சபையில் எழுந்தருளுவதைக் காணக் கண்கோடி வேண்டும்.