நடிகர் அமீர்கான் – கிரண் ராவ் இருவரும் தங்களது 15 வருட திருமண பந்தத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

அமீர் தனது முதல்மனைவியான ரீனா தத்தாவை 2002-ல் விவாகரத்து செய்தார். இந்த தம்பதிக்கு ஐரா கான், ஜூனைத் என்ற இரண்டு குழந்தைகள் உண்டு.

அமீர்கான் லகான் திரைப்படத்தில் நடித்த போது அந்தப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் 2005-ல் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமீர்கான் – கிரண் ராவ் இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், 15 ஆண்டுகாலம் மகிழ்ச்சியான தம்பதியாக வாழ்ந்தோம். ஆனால் நாங்கள் இருவருமே தனித்தனியாக புதிய வாழ்க்கைக்குள் நுழைகிறோம். இனி நாங்கள் கணவன் மனைவி அல்ல. பெற்றோர் மட்டுமே… இந்த முடிவை சில காலத்துக்கு முன்பே எடுத்துவிட்டோம். ஆனால் சில நடைமுறைகளால் அறிவிக்க தாமதம் ஆனது.

நாங்கள் இருவரும் மண வாழ்க்கையில் பிரிந்தாலும் தொடர்ந்து திரைத்துறையிலும், சமூகசேவையிலும், எங்கள் குழந்தையை வளர்ப்பதிலும் இணைந்தே செயல்படுவோம். விவாகரத்து என்பது முடிவு அல்ல. அது இன்னொரு புதிய வாழ்க்கைக்கான தொடக்கம். எங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.