டில்லி
பாஜகவின் மக்களவை உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீரைக் காணவில்லை என நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
டில்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. இதையொட்டி மக்கள் கடும் துயரில் ஆழ்ந்துள்ளனர். பல கட்சிகள் இது குறித்து கவலைக் கொண்டுள்ளன. இது குறித்து விவாதிக்கக் கடந்த நவம்பர் மாதம் டில்லியில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜகவின் மக்களவை உறுப்பினருமான கௌதம் கம்பீர் கலந்துக் கொள்ளவில்லை.
இது ஆளும் ஆம் ஆத்மிக் கட்சிக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. இந்நிலையில் அந்த கூட்டம் நடைபெற்ற அதே தினத்தன்று இந்தூர் நகரில் தனது நண்பர்களுடன் ஒரு தெருவில் கௌதம் கம்பீர் ஜிலேபி சாப்பிடும் புகைப்படம் வெளியாகி அதிருப்தியை அதிகரித்துள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சியினர் ஒரு தட்டில் ஜிலேபிகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் ஆம் அத்மி கட்சியினர் ஒட்டி உள்ள சுவரொட்டிகளில், “இவரை நீங்கள் பார்த்தீர்களா? இவர கடைசியாக இந்தூரில் ஜிலேபி மற்றும் அவல் சாப்பிடும் போது காணப்பட்டார். காணாமல் போன இவரை விரைவில் கண்டுபிடித்துத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் காணப்படுகிறது.