சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம், ஆத்ஆத்மி கட்சி அறிவித்து உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. கூட்டணி பேரங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவியன், தமிழக சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஊழல் மலிந்த இரண்டு திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை முற்றாக விடுவிக்க வேண்டும் என்பதே காந்திய மக்கள் இயக்கத்தின் ஒற்றை நோக்கமாகும். கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்ற இரண்டு இலட்சியப் பதாகைகளைச் சுமந்தபடி காந்திய மக்கள் இயக்கம் தன் பயணத்தைத் தொடர்கிறது.
உண்மை, நேர்மை, ஒழுக்கம், சமூக நலன் சார்ந்த சிந்தனை, தன்னல மறுப்பு ஆகியவையே மேலான அரசியல்வாதிகளின் பண்பு நலன்கள் ஆகும். ஆனால் நம்முடைய அரசியல்வாதிகளிடம் இவற்றை காண்பதற்கில்லை. இழிந்த சாக்கடையாக மாறிவிட்ட அரசியலமைப்பை சீர்படுத்த வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலான வாக்காளர்களிடம் இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது.
தற்போதைய நிலையில், எந்தக் கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாததால் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை காந்திய மக்கள் இயக்கம் முற்றாக புறக்கணிக்கிறது என்று அறிவித்துள்ளார்.
அதுபோல, சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடாது கட்சித்தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கமல்ஹாசன் பலமுறை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், ஆம்ஆத்மி கட்சி, கமல் கட்சியுடன் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட நிலையில், திடீரென தேர்தலிலே போட்டியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினியை அரசியலுக்கு இழுத்த தமிழருவி மணியனின் அரசியல் தடுமாற்றம்……