டில்லி

தலைமை தேர்தல் ஆணையர் பொய்த் தகவல்களை கூறுவதாக  ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில்  20 டில்லி சட்டப்பேரவையின் 20 ஆம் ஆத்மி உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது.    அதை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தர்விட்டார்.   இந்த உத்தரவுக்கு எதிராக  ஆம் ஆத்மி சட்டசபை கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் புதிதாக பதவி ஏற்றுக் கொண்டுள்ள தலைமை தேர்தல் ஆணயர் ஓம் பிரகாஷ் ராவத், “நீக்கப் பட்ட ஆம் ஆத்மி சட்டசபை உறுப்பினர்களுக்கு பதில் அளிக்க இரு வாய்புக்கள் தரப்பட்டன.   கடந்த வருடம் செப்டம்பர் 28ஆம் தேதியிலும் நவம்பர் 2 ஆம் தேதியிலும் அவர்களுக்கு தரப்பட்ட வாய்ப்புக்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை” எனக் கூறினார்.

அதற்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா பதில் அளித்துள்ளார்.  அவர், “தேர்தல் ஆணையம் கூறுவது பொய்யான தகவல் ஆகும்.    அப்படியே அது உண்மை என வைத்துக் கொண்டாலும்,  உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமலே ஆணையம் முடிவெடுத்துள்ளதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.   ஆரம்பத்தில் இருந்தே இது ஒரு தலைப்பட்சமான முடிவு என நாங்கள் கூறி வந்ததை தற்போது தேர்தல் ஆணையர் ஒப்புக் கொண்டுள்ளார்”  என தெரிவித்துள்ளார்.