சென்னை: விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா இன்று தவெகவில் இணைந்த நிலையில், அவருக்கு தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி கொடுத்துள்ளார்.
அதுபோல அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த நிர்மல் குமார் துணை பொதுச்செயலாளராக (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2026 நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் என கணிக்க முடியாத நிலையில், பல்வேறு அதிரடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆளும் திமுக அரசுக்கு எதிராக பல விஷயங்களில் விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், சில கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மாற்றுக்கட்சிகளுக்கு தாவும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்ய்தார். அதாவது, ‘அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தது, விசிக கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என தகவல்கள் பரவின.
இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா இன்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். அவரை விஜய் கட்டித்தழுவி வரவேற்றார். இதைத்தொடர்ந்து, அவருக்கு கட்சியின் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல, அதிமுக தலைமைமீது அதிருப்தியில் இருந்த அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் நிர்மல்குமார் அங்கிருந்து விலகி தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
சென்னை பனையூர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்வு நடைபெற்றது. அப்போது, விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் இருவரும் தவெகவில் இணைந்தனர்.
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகிய நிர்மல் குமார் துணை பொதுச்செயலாளராக (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது பற்றி தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு ரீதியிலானக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், வலுவானத் தேர்தல் பிரசாரக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
“தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா, என்னுடைய அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று மூன்றாம் கட்டமாக 19 மாவட்ட பொறுப்பாளர்கள் கொண்ட பெயர் பட்டியலை தவெக வெளியிட்டுள்ளது. கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட தவெகவில் ஏற்கனவே 38 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 19 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்தம் 57 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
3-ஆம் கட்ட தவெக மாவட்ட நிர்வாகிகள் பட்டியல்! பொறுப்புகளில் நியமிக்கப்படுபவர்கள் அனைவரும் எனது உத்தரவு மற்றும் பொதுச்செய லாளர் என். ஆனந்த்தின் ஆலோசனைக்கிணங்க, கட்சி வழிகாட்டுதலின்படி கட்சிப் பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.