விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜுனா இன்று அறிவித்துள்ளார்.
கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆறு மாதத்திற்கு இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
ஏழை எளிய அடித்தட்டு மக்களின் கட்சியாக பல ஆண்டுகளாக விளங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் படாடோபமாக தன்னை நுழைத்துக்கொண்டு பகட்டாக வலம் வந்த ஆதவ் அர்ஜுன், “கட்சியில் ஏதோ ஒரு செயல்திட்டத்துடன் இருந்துவந்ததாக” திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக திருமாவளவனுக்கு அவர் இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டிசம்பர் 6ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜீன் அந்த கூட்டத்தை தவெக-வுக்கு ஆள் சேர்க்கும் கூட்டமாக மாற்றியதோடு திமுக மற்றும் அதன் தலைமையை நேரடியாக தாக்கிப் பேசினார்.
ஆதவ் அர்ஜீன் கலந்து கொள்ளும் கூட்டங்களை தன்னை முன்னிலைப் படுத்தி நடத்தப்படும் கூட்டங்களாக மாற்றுவதோடு திமுக-வுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக கூறிவந்த நிலையில் அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.