பெங்களூரு:
பான் கார்டு, வருமானவரி தாக்கல் மற்றும் வங்கிகளில் கணக்கு தொடங்க, அரசின் மானியங்கள் பெற, புதிய வாகன பதிவு, சமையல் காஸ் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.,
தமிழ்நாட்டில் ரேசன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதார் எண் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த கார்டு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது விமான பயணத்துக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமான பயணத்துக்கு பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும். பயணிகள் விமான நிலையத்தில் நுழையும் போதே அந்த நுழைவு வாயிலில் வைக்கப்பட்டு உள்ள எந்திரத்தில் தங்களது கைரேகையை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே ஆதார் அட்டைக்காக பதிவு செய்து வைத்துள்ள கைரேகையும் இப்போது ஸ்கேன் செய்கிற பயணியின் கைரேகையும் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. இரண்டும் ஒன்றாக இருந்தால்தான் அந்த பயணி விமானத்தில் செல்ல முடியும்.
இதன் மூலம் ஒருவர் போலி பாஸ்போர்ட்கள் ஒழிக்கப்படும். இத்திட்டம் சோதனை முயற்சியாக தற்போது ஐதராபாத் விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டது. பெங்களூரு விமான நிலையத்திலும் தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் பயணிகள் இனி அடையாள அட்டைகளுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. விமான நிலையங்களின் பாதுகாப்பும் மேம்படும்.
சென்னை உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.