’’தமிழ்நாட்டில் இனிமேல் முடி வெட்டவும் ஆதார் தேவை’’
ஒரு காலத்தில் முக்காடு போட்டுக்கொண்டு வாங்கிய மதுபானங்களை வாங்க ஆதார் கட்டாயம் என்றது, தமிழக அரசு.
குடிமகன்கள், தங்கள் விதியை நினைத்து நொந்த நேரத்தில், அந்த விதியை மாற்றியது ,அரசாங்கம்.
இப்போது முடி வெட்டிக்கொள்ளவும், ஷேவ் செய்து கொள்ளவும் , வாடிக்கையாளர்களிடம் ஆதார் கேட்க வேண்டும் என சலூன் கடைக்காரர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக சலூன் கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள், சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
அதில்’’கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதா என்பதைப் பின்னர் கண்டறியும் நோக்கில் அவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண். மற்றும் ஆதார் விவரங்களைக் கேட்டுப்பெற வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
’’ இந்த விவரங்களைக் கடை ஊழியர்கள் கையில் எழுதினால் போதும். சலூன் மூலம் கொரோனா பரவலைத் தடுக்க இது உபயோகமாக இருக்கும். ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது போன்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்’’ என்கிறார், மூத்த அதிகாரி ஒருவர்.