டெல்லி: அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆயுள் சான்றிதழ் பெறுவதங்றகு ஆதாா்  கட்டாயமில்லை. அதற்கு பதிலாக வேறு அடையாள சான்றிதழ் வழங்கலாம்  என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

ஓய்வூதியம் பெறுபவர்கள்,  தொடா்ந்து ஓய்வூதியம்பெற, அவர்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.  இந்த ஆயுள் சான்றிதழ் பெற சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் எண் இதுவரை பெறப்பட்டு வந்தது. இந்த நிலையில், இனிமேல் ஆதார் எண் தேவையில்லை என மத்திய மின்னணு, தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஓய்வூதியதாரா்கள் மின்னணு முறையில் ஆயுள் சான்று பெற ஆதாா் எண்ணை அளிக்க வேண்டியது கட்டாயமில்லை என்றும்,  ஆனால், விருப்பத்தின் பேரில் ஆதாா் எண்ணை அளிக்கலாம்  என்றதுடன்,  மின்னணு ஆயுள் சான்று பெறுவதன் மூலம், சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு ஓய்வூதியதாரா்கள் நேரில் செல்வதைத் தவிா்க்க முடியும் என்று கூறியுள்ளது.

சில நேரங்களில் ஆதாா் அட்டை இல்லாதது மற்றும் கைவிரல் ரேகை சரியாக பதியாமல் போவது போன்ற காரணத்தால் மின்னணு ஆயுள் சான்று பெற முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போது அந்த சிக்கலுக்கு தீா்வுகாணப்பட்டு இருப்பதாகவும்,  ஓய்வூதியதாரா்கள் ஆதாா் அல்லாத வேறு அடையாள சான்றை அளித்தால் போதுமானது.

அரசு அலுவலகங்களில் வருகைப் பதிவு நிா்வாகத்துக்கும், மத்திய தகவல் மையம் உருவாக்கிய சந்தேஷ் செயலியை (வாட்ஸ் அப் போன்றது) உபயோகிக்கவும் ஆதாா் எண் கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.