டில்லி:
மொபைல் எண் உள்பட அனைத்து பரிவர்த்தனைக்கும் ஆதார் கட்டாயம் என்று அறிவித்திருந்த மத்திய அரசு தற்போது சிம்கார்டு வாங்க ஆதார் அட்டை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று உத்தரவிட்டு உள்ளது.
இது மொபைல் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கி கணக்கு உள்பட அனைத்து விமான சேவைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளை பெறுவதற்கும், பல்வேறு சேவைகளுக்கும், பயன்பாட்டுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு கூறி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்டுள்ள பல்வேறு பொதுநல வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த விசாரணையின்பேது, செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை உச்சநீதி மன்றம் கண்டித்தும், சிம் கார்டுகள் வாங்க ஆதார் கட்டாயமில்லை என்றும் சுப்ரீம் அறிவுறுத்தி இருந்தது.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு சார்பில் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதில், செல்போன் சிம்கார்டுக்காக ஆதார் அட்டையை வாடிக்கையாளர்களிடம் கட்டாயபடுத்தக் கூடாது என்றும், ஆதார் தகவல்கள் தெரிவிக்காவிட்டாலும், பயனாளர்களுக்கு சிம்கார்டு வழங்க வேண்டும் என்றும் ஆதாருக்கு பதிலாக ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களின் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் தொலைதொடர்பு நிறுவனங்களின் தொல்லையில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடைவார்கள் என எதிர்பார்ககலாம்….