சென்னை:

திருமணம் பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயமில்லை என்றும், அதுபோல மணமக்களின் பெற்றோர்கள் ஏற்கனவே இறந்திருந்தால், அவர்களின் இறப்பு சான்றிதழும் தேவையில்லை என்று தமிழக பதிவுத்துறை தலைவர் அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களும் அறிக்கை அனுப்பி உள்ளார்.

மத்திய அரசு அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில,  இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில்,தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அலுவலகம், திருமண பதிவுக்கு ஆதார் தேவையா என்பது குறித்து,  புதிய வழிகாட்டுதல்  நெறிமுறைகளை  தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அலுவலகம் சுற்றறிக்கை யாக வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,  திருமண பதிவுக்கு ஆதார் அட்டையை ஓர் அடையாள சான்று ஆவனமாக  மட்டுமே ஏற்றுக்கொள்ளலாம் என்றும், அதேவேளையில், திருமணப்பதிவிற்கு ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மணமக்களின் பெற்றோர் யாரேனும் இறந்துவிட்டதாக விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தால், இறந்த பெற்றோரின் பெயருக்கு முன் லேட் ( Late) என குறிப்பிட்டால் போதுமானது. இறப்புச் சான்றிதழ்  தேவையில்லை.

மணமக்கள் மற்றும் சாட்சிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகளை சரிபார்க்கும் பொழுது, அவர்கள் தாக்கல் செய்யும் ஆதாரங்களில், பெயர் மற்றும் முதலெழுத்தும், விண்ணப்பத்தில் இருப்பதும், ஒத்துள்ளதா என பதிவு நன்கு பரிசீலனை செய்த பின்னரே திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.

மணமக்களில் யாரேனும் ஒருவர், கணவர் அல்லது மனைவியை இழந்தவர் என விண்ணப்பத்தில் குறிப்பிட்டிரு ந்தால், இறந்த கணவர் அல்லது மனைவியின் இறப்புச் சான்றின் ஒரிஜினலை  சரிபார்த்து அதன் நகலை கண்டிப்பாக பெற்று கோர்வை செய்த பின்னரே, பதிவு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.