டில்லி,

ரசு நலத்திட்டங்களை பெற ஆதார் விவரம் அளிக்க இந்த ஆண்டு இறுதி வரை (டிசம்பர் 31)  வரை காலக்கெடு நீட்டிப்பு செய்வதாக மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.

அரசின் அனைத்து வகையான  நலத்திட்ட பயன்களை பெறுவதற்கும், மற்றும் அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இதற்கான காலக்கெடு இன்று (ஆகஸ்டு 31)டன் முடிவடைவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. பின்னர் செப்டம்பர் மாதம் 30ந்தேதி வரை நீட்டிப்பதாகவும் அறிவித்தது.

மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதுகுறித்த விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய விசாரணையின்போது,   தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் தவான் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், ‘அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என்று 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.  எனவே, ஆதார் தொடர்பாக தொடுக்கப்பட்டி ருக்கும் பிற மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் உரிய நீதிபதிகள் அமர்வு விரைந்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.

அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் குறுக்கிட்டு, ஆதார் விவரத்தை அளிப்பதற்கான இறுதிக் காலக்கெடு செப்டம்பர் மாதம் 30-ம் தேதியிலிருந்து டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்கு மத்திய அரசு நீட்டிக்க இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள்,  இறுதிக் காலக்கெடு டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட இருப்பதால், இப்போது மனுக்களை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. நவம்பர் மாதத்தில் அந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என்றும் இந்த மனுக்கள் குறித்து நவம்பர் மாதம் முதல் வாரத்தில் விசாரணை நடத்தப்பட இருக்கும் மனுக்களுடன் சேர்த்து பட்டியலிடப்படுகிறது’ என்றனர்.