திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே செயல்பட்டு வரும் காக்களூர் ஆவின் தொழிற்சாலையில் இயந்திரத்தில் முடி சிக்கியதால் தலை துண்டாகி இளம்பெண் உமா மகேஸ்வரி என்பவர் உயிரிழந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலத்தை சேர்ந்த உமா (30) என்பவர் கணவருடன் சென்னையில் தங்கி  காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்த நிலையில்  கவனக்குறைவு காரணமாக இயந்திரத்தில் சிக்கி உயிரிந்துள்ளார்.

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது.  காக்களூரில் 4.5 ஏக்கர் பரப்பளவில் நாளொன்றுக்கு 1,00,000 லிட்டர் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் பால் பண்ணை செயல்பட்டு  வருகிறது. காக்களூர் பால் பண்ணையின் சேமிப்பு கொள்ளளவு 2,00,000 லிட்டர் ஆகும். காக்களூர் பால் பண்ணையில் நாளொன்றுக்கு 100000 லிட்டர் பால் குளிரூட்டும் சேமப்பு கிடங்கு (Cold Room) உள்ளது. இந்த  பால் பண்ணையில் நாளொன்றுக்கு 100000 லிட்டர் பால் கையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.  இந்த வளாகத்தில் பால் பைகள் அடிக்கும் தானியங்கி இயந்திரங்கள் 6 உள்ளது, 1 தானியங்கி இயந்திரம் தயிர் மற்றும் மோர் பைகள் அடிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றியத்தில் 2018-19ம் ஆண்டில் 35,000 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நடப்பு ஆண்டில் நாளொன்றுக்கு சுமார் 77,000 லிட்டராக பால் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒன்றியம் தற்போது நாளொன்றுக்கு 77,000 லிட்டர் TM, SM, FCM என்ற 3 வகையிலான பால் விற்பனை செய்து வருகிறது. 20,000 லிட்டர் உபரிப்பால் பாக்கெட் பாலாக இணையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

காக்களூர் பால் பண்ணை வளாகத்தில் தலா 50,000 லிட்டர் கழிவு சுத்திகரிப்பு நிலையம் 2 உள்ளது. ஒன்றியம் தற்போது மாதம் ஒன்றுக்கு ரூ.1 கோடி 30 இலட்சம் மதிப்பீட்டுத் தொகை பால் பொருட்கள் மற்றும் உபபொருட்கள் நெய், கோவா, பாதாம் பவுடர், பிஸ்தா பவுடர், தயிர், மோர் மற்றும் மைசூர்பா விற்பனை செய்து வருகிறது.  தற்போது பால் விற்பனைக்காக 9 பால் விநியோக ஒப்பந்த வழித்தடம் செயல்பட்டு வருகிறது. காக்களூர் பால் பண்ணை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதி நவீன பாலகம் மற்றும் தரக்கட்டுபாட்டு ஆய்வகம் 13.02.2021 அன்று திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

தற்போது இந்த பால் பண்ணையில்  நாள் தோறும்   1.25 லட்சம் லிட்டர் பால்  உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.  பின்னர் காக்களூர் பால் பண்ணையில் பால் பதப்படுத்தப்பட்டு  சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்த ஆவின் பால் பண்ணையில் ஆண்கள், பெண்கள் என  ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கு செயல்பாட்டில் இருந்த இயந்திரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இளம்பெண்ணின் முடி சிக்கி, அவரது தலை துண்டானது.  பால் பாக்கெட்டுகளை டப்பில் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒப்பந்த ஊழியரான   உமா மகேஸ்வரியின் முடி  இயந்திரத்தில் சிக்கியுள்ளது.   இதனால், அவர் இயந்திரத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு,  தலை நசுங்கி, தலை துண்டிக்காக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அ்ஙகு பணியா்றறி வந்தவர்களிடையே   அதிர்ச்சியை  ஏற்படுத்தி  உள்ளது.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து, உயிரிழந்த உமா மகேஸ்வரியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பால் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பணியாளர்கள் பணியில் இருக்கும்போது, தலை முடி பறக்காதவாறு பாதுகாப்பு கவசம் அணிய வேண்டும். அதை அணியாமல் பணியாற்றியதால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.