நாக்பூர்
நாக்பூரில் ரூ. 7.5 லட்சம் பணத்துடன் ஏ டி எம் இயந்திரம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மன்காபூர் சதுக்கத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இங்கு சிலர் பணம் எடுக்க வந்தபோது ஏ.டி.எம். எந்திரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எனவே அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதிகாலை வேளையில் முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கருப்பு பெயிண்ட் அடித்ததும் நெட்வொர்க் கேபிள்களை துண்டித்த பின்னர் அவர்கள் கொண்டு வந்திருந்த உபகரணங்கள் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை அகற்றி, அதை அலேக்காக தூக்கி சென்றதும் தெரிய வந்தது.
கொள்ளை அடிக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.7.5 லட்சம் பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை துக்கிச்சென்ற 3 கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.