சென்னை:
மெரினாவில் குளித்தால் உடல் நலத்துக்கு கேடு ஏற்படும் என்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
சென்னை கடல் நீர் மாசு குறித்து மத்திய கடல் ஆராய்ச்சி மையம் ஆய்வு மேற்கொண்டது. இதில் மக்கள் அதிகம் கூடும் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், எண்ணூர், கோவளம் ஆகிய 5 கடற்கரையில் இருந்து 192 மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தியது. கோடை, மழைக் கால நீரின் மாதிரியை பரிசோதனை செய்ததில் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியா உள்ளிட்ட நுண்கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அடையாறு, கூவம் ஆறுகளின் வழியாக கழிவு நீர் கடலில் கலப்பதால் பாக்டீரியாக்கள் அதிகரித்துள்ளது. இதனால் கடல் நீர் மாசு அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் மெரினாவில் சேகரிக்கப்பட்ட நீரில் அதிக அளவிலான பாக்டீரியாக்கள் இருந்தது. மெரினா கடல் நீரில் குளிப்பதால் செறிமான கோளாறு, வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
இதேபோல் மற்ற பகுதிகளிலும் கழிவு கலப்பதால் கேடு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. கோவளம் கடல் நீரில் மட்டுமே குறைந்த அளவு மாசு அடைந்திருப்பது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.