சென்னை: வங்கக்கடலில் 24-ந்தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது என்றும்,   தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருகிற 22-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று  நள்ளிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழை சில இடங்களில் காலை 10 மணி வரை இந்த மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட பல பகுதிகளில், காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவில் பெய்த மழை சென்னையில் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வங்காளதேசம், மேற்கு வங்காள கடற்கரை பகுதியில் வருகிற 24-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேலும், இந்த புயல் சின்னம் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  நேற்றிரவு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த மழை காலை வரை நீடித்தது.  இது காலை 10 மணி வரை நீடிக்கும் என்றும்,   சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக  தெரிவித்துள்ளது.

மேலும் கன்னியாகுமரி, திருவள்ளூர், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் சாலைகளில் வழுக்கும் வகையில் மழை பெய்யவும், சில இடங்களில் போக்கவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.