சென்னை: நீதிமன்ற உத்தரவின்படி, தனியாருக்கான சொந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ரூ.1 கோடி லஞ்சம் கேட்ட, பெண் தாசில்தார், அவருக்கு உடந்தையாக இருந்த போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் நடைபெற்றுள்ளது. இது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, ஈஞ்சம்பாக்கம் – வெட்டுவாங்கேணி இணைப்பு சாலை, 40 அடி அகலம் உடையது. இந்த சாலையை ஒட்டி சமூக ஆர்வலர் பொன்தங்கவேல் உள்பட சிலருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, 13 வீடுகள் கட்டி உள்ளனர். இந்த வீடுகளை அகற்றுவதில் அரசியல் தலையீடு இருந்ததால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சமூக ஆர்வலர் பொன்தங்கவேல் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்து, கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதம் பரபரப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றி, சாலையை மீட்டெடுக்க, மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டினர்.
இதைத்தொடர்ந்து, சமூக ஆர்வலர் பொன்தங்கவேல் கடந்த 3ம் தேதி (2024 மே 3ந்தேதி) , சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார இணை கமிஷனரிடம், மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுபடி, மூன்று நாட்களில் ஆக்கிரமிப்பை அகற்றி, அறிக்கை வழங்க வேண்டும் என, இணை கமிஷனர், மாநகராட்சி சிறப்பு தாசில்தார் சரோஜாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சிறப்பு தாசில்தார் சரோஜா கடந்த 5ம் தேதி, பொன்தங்கவேலை வீட்டுக்கு அழைத்து பேசியதுடன், ஆக்கிரமிப்பை அகற்ற 1 கோடி ரூபாய் லஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளார். தனியாருக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பல கோடி இருப்பதால், அதில் ஒரு பகுதியாக ரூ.1 கோடி லஞ்சம் தர வேண்டும் என பொன்தங்கவேலிடம் பேரம் பேசியுள்ளனர். மேலும், முதற்கட்டமாக, 3 லட்சம் ரூபாய் தந்தால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ‘நோட்டீஸ்’ வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர் பொன் தங்கவேல், இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பொன்தங்கவேல் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., இம்மானுவேல் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் துாவப்பட்ட 3 லட்சம் ரூபாயை, பொன்தங்கவேலிடம் கொடுத்து அனுப்பினர்.
இதை எடுத்துச்சென்ற பொன் தங்கவேல் அடையாறில் உள்ள வட்டார இணை கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று, அங்கு , தாசில்தார் சரோஜாவிடம் பணம் கொடுக்க சென்றார். ஆனால் சரோஜா, பணத்தை வாங்காமல், தனக்கு தெரிந்த போலீஸ்காரர் ஒருவரிடம் தரும்படி கூறியுள்ளார்.எ அவர் கூறியபடி, பரங்கிமலை இணை கமிஷனர் அலுவலக கார் ஓட்டுனரான போலீஸ்காரர் அருணிடம் அந்த பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், தாசில்தார் சரோஜாவைவும் கைது செய்தனர்.
லஞ்ச பணம் வாங்க உறுதுணையாக இருந்த சரோஜாவின் கணவர் பிரவீன் என்பவரை, போலீசார் தேடுகின்றனர். பிரவீன், அருணுடன் பணிபுரியும் சக போலீஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.