இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு மருத்துவருக்கும் தனித்துவமான அடையாள எண்ணை வழங்க தேசிய மருத்துவ ஆணையம் (NMC) திட்டமிட்டுள்ளது.

இதற்கான முன்மொழிவு, ‘மருத்துவ நிபுணர்களின் பதிவு மற்றும் மருத்துவத் தொழிலுக்கான உரிமம் வழங்குதல் (திருத்தம்) விதிகள், 2026’ என்ற வரைவு விதிகளில் இடம்பெற்றுள்ளது.

‘ஒரே நாடு, ஒரே உரிமம்’ என்றால் என்ன?

மருத்துவப் படிப்பை இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் முடித்தவர்களுக்கு, அவர்கள் மருத்துவப் பணியில் சேருவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநில மருத்துவக் கவுன்சிலில் தங்களது பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்ததும், தேசிய மருத்துவ ஆணையத்தின் நெறிமுறைகள் மற்றும் மருத்துவப் பதிவு வாரியம் (EMRB) சார்பில் ஒவ்வொரு மருத்துவருக்கும் தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும்.

இந்த அடையாள எண்ணைப் பெற்ற மருத்துவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்திலும் சட்டப்பூர்வமாக மருத்துவம் செய்ய முடியும்.

தற்போது ஒரு மாநிலத்தில் மருத்துவப் பணியாற்ற பதிவு செய்துள்ள மருத்துவர், மற்றொரு மாநிலத்தில் பணியாற்றும்போது தனியாக பதிவு செய்வது போன்ற நடைமுறைகள் உள்ளன. இதை எளிதாக்கும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே மருத்துவ உரிமம்’ என்ற திட்டத்தை கொண்டுவர NMC முன்மொழிந்துள்ளது.

இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், நாடு முழுவதும் மருத்துவர்களின் பதிவு முறையை ஒருங்கிணைத்து, மருத்துவத் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.