மும்பை: திருநங்கை போல வேடமிட்டு அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழைந்து, கணவரை மாந்திரீகம் மூலம் குணப்படுத்துவதாகக் கூறி 25 வயது விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை பவாய் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் அனில் ஷிண்டே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று மதியம் 12.20 மணி முதல் 12.50 மணி வரை திருநங்கை போல சேலை அணிந்து வந்த ஷிண்டே, பாதுகாப்புப் பணியாளர்களை ஏமாற்றி கட்டிடத்துக்குள் சென்றுள்ளார். பின்னர் பல வீடுகளின் கதவுகளைத் தட்டிய நிலையில், 3-வது மாடியில் வசித்த விமானப் பணிப்பெண் கதவைத் திறந்துள்ளார்.
அப்போது, அவரது கணவரை பாதித்திருக்கும் தீய சக்தியை விரட்ட முடியும் என்று கூறிய ஷிண்டே, வீட்டுக்குள் நுழைந்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணிடம் சடங்கு செய்வதாகக் கூறி தண்ணீரைத் தெளித்துவிட்டு, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்தப் பெண் இரவு 11 மணியளவில் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து 3 பேர் கொண்ட தனிப்படை விசாரணையைத் தொடங்கியது.
பவாயில் இருந்து குற்றவாளி சென்ற பாதையில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். சேலை அணிந்தபடி ஆட்டோவில் சென்ற ஷிண்டே, தானே மாவட்டம் கரேகாவ் பகுதியில் உள்ள குடிசைப் பகுதிக்குச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று அவரை போலீசார் கைது செய்தனர்.
புகார் அளிக்கப்பட்ட 4 மணி நேரத்துக்குள் குற்றவாளியை போலீசார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஷிண்டேவின் குடும்பத்தினரும் பல்வேறு பகுதிகளில் திருநங்கைகள் போல வேடமிட்டு பிச்சை எடுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஷிண்டே மீது ஏற்கெனவே வேறு குற்ற வழக்குகள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.