சென்னை: குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க உதவுவதற்காக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்களும் அதற்கான பொருளும் அடங்கிய இணையப் பக்கம் தொடங்கப்படும். தமிழ் இணைய கல்விக் கழகம் மூலம் இணையப் பக்கம் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் திமுக எம்எல்ஏ,  மயிலை வேலு இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். அதுதான் எனது வேண்டுகோள் என தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான சமூக வலைதளங்கள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் தலைவரே! என்று நிதன் சிற்றரசு என்பவர் எக்ஸ் தளத்தில் கேட்டு இருந்தார்.

இந்த நிலையில், தம்பி நிதின் சிற்றரசு கோரிக்கை நிறைவேற்றப்படும். குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் – அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.