சென்னை:
திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஆ.ராசா , எடப்பாடி பழனிசாமி அரசியலில் பெற்ற வளர்ச்சி பற்றி ஒரு உவமையை தெரிவித்து பேசினார்.

இந்த உவமை முதல்வரின் தாயார் குறித்து அவதூறு பரப்புவதாக இருப்பதாக கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் தனது பேச்சு திரித்து வெளியிடப்பட்டதாக ராசா விளக்கமளித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தங்களது கட்சியினர் பேச்சுக்கள் திரித்து வெட்டி ஒட்டி ஒளிபரப்பப் படுவதாக குற்றம் சாட்டினார். அதேநேரம் பிரச்சாரத்தின்போது வார்த்தைகளை கவனமாக பேசுமாறு தனது கட்சியினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில்தான், நேற்று, திருவெற்றியூரில் முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தனது தாய் குறித்து அவதூறாக பேசி விட்டார்கள் என்று கண்ணீர் மல்க உணர்ச்சிப் பெருக்குடன் பேசியிருந்தார்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராசா இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் , தனது பேச்சால் முதல்வர் மனது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ராசா கூறியதாவது: எனது பேச்சால் முதல்வர் காயப்பட்டார் என்ற செய்தியை நாளிதழ் வாயிலாக படித்து மிகுந்த மன வேதனை அடைகிறேன். இடப் பொருத்தம் இல்லாமல் சித்தரிக்கப்பட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக, அடி மனதில் இருந்து வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் . இன்னும் ஒரு படி மேலே போய் சொன்னால், முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல், உள்ளபடியே காயப்பட்டு இருப்பதாக உணர்வாரேயானால், எனது மனம் திறந்த மன்னிப்பு கோருவதில் எனக்கு சிறிதும் தயக்கம் இல்லை. முதல்வருக்கும் அவரது கட்சிக்காரர்களுக்கும், நடுநிலையாளர்களும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது , எனது பேச்சு இரண்டு தனி நபர்கள் பற்றிய தனிநபர் விமர்சனம் அல்ல. பொது வாழ்க்கையில் இரண்டு அரசியல் ஆளுமைகள் குறித்த மதிப்பீடு தான். இவ்வாறு தெரிவித்துள்ளார்

இந்நிலையில், இதுதொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.