டெல்லி: சுழன்று சுழன்று வேலை செய்யும் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் விருப்பம் தெரிவித்துள்ளார். அதுபோல, அரசியல் குறித்து சரத் யாதவ் நிறைய கற்றுத் தந்துள்ளார் என ராகுல்காந்தி கூறினார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டெல்லியில் பீகாரைச் சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவை அவரது இல்லத் தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சதிப்புக்கு பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, மூத்த தலைவர் சரத் யாதவை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவரது உடல் நலன் குறித்து விசாரித்தேன். அவர் நலமுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றவர், எனக்கு அரசியல் குறித்து சரத் யாதவ் நிறைய கற்றுத் தந்துள்ளார்.
தற்போது, நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது என சரத் பவார் கூறுகிறார் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆளும் கட்சியினர் மக்களிடையே பிரிவினையையும், வெறுப்புணர்வு கட்டவிழ்த்து விடுகின்றனர், இதை நாம் ஒற்றுமையுடன் எதிர்கொண்டு சகோதரத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். இதற்காக நாட்டின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத் யாதவ், காங்கிரஸ் கட்சியில் ஓய்வு இல்லாமல் சுழன்று சுழன்று பணியாற்றி வருபவர் ராகுல் காந்தி. அவரை கட்சியின் தலைவராக்க வேண்டும். அவர் தலைமை பொறுப்பு ஏற்றால்தான், வருங்காலங்களில் பெரிய பெரிய காரியங்களை நாம் செய்ய முடியும், பாஜகவை எதிர்கொள்ள முடியும் என்றார்.
இதுகுறித்து செய்தியளார்கள் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுட்பினர். அதற்கு பதில் கூறிய, சரத்ஜியின் கருத்தை கவனத்தில் கொள்கிறேன் என்றார்.
ராகுல்காந்திஏற்கனவே 2017ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். அதன் பின்னர் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைமை பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.